ஆம்னி பஸ்களுக்கு தேசிய அளவில் தனி பர்மிட் வழங்கக்கோரி தீர்மானம்
சென்னை:ஆம்னி பஸ்களுக்கு தேசிய அளவில், 'தனி பர்மிட் வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 தீர்மானங்களை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நிறைவேற்றி உள்ளனர்.அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று நடந்தது. அதில், 200க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:இந்தியாவில் பொதுப்போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், சுங்கச்சாவடிகளில் விலக்கு அளிக்க வேண்டும். ஆம்னி பஸ்கள் தற்போது சுற்றுலா, 'பர்மிட்'டில் தான் இயக்கப்படுகின்றன. அதனால், பல இடையூறுகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, தேசிய அளவில் ஆம்னி பஸ்களுக்கு என, தனி பர்மிட் வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆம்னி பஸ்களை பதிவு செய்வதற்கு, குறைந்தபட்சம் ஒரு மாதமாகிறது. அதை மற்ற மாநிலங்கள் போல, ஒரே நாளில் பதிவு செய்யும் வசதியை கொண்டு வர வேண்டும். வாகனங்களுக்கான சேவைகள் அனைத்தையும், ஆன்லைனில் தடையின்றி விரைவாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.சுங்கச்சாவடிகளில் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தனி பாதை வேண்டும் என்பது உட்பட, 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.