அவதுாறு பரப்பிய ஓய்வு பெற்ற அதிகாரி கைது
சென்னை:கரூரில் கடந்த மாதம் 27 ம் தேதி, த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்புவோரை, சென்னை மாநகர சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்தவகையில், காவல் துறை விரல் ரேகை பிரிவில் பணியாற்றி, ஓய்வு பெற்ற வரதராஜன், 64, 'யூடியூப்' சேனலில், கரூரில் நடந்த உயிரிழப்பை சுட்டிக்காட்டி, உளவுத்துறை செயலிழந்து விட்டதாக, அவதுாறு தகவல்களை பரப்பியதாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக, சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் வரதராஜனிடம் விசாரித்து, நேற்று கைது செய்தனர். இவர் 'யூடியூப்' சேனல்களில், முதல்வர் ஸ்டாலின் குறித்தும், தி.மு.க., அரசையும் தொடர்ந்து விமர்சனம் செய்து பேட்டி அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.