சென்னை:வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பணி பாதுகாப்பு வழங்குதல் உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுதும் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடந்தது.கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் இன்ஸ்பெக்டர், வட்டாட்சியர் உள்ளிட்ட, 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று தமிழகம் முழுதும், வருவாய்த்துறை அலுவலகங்கள், பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால், பல்வேறு பணிகளுக்காக, நேற்று தாலுகா அலுவலகம் வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.சென்னை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் குமரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டம் குறித்து, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் கூறியதாவது:வருவாய்த்துறை ஊழியர்கள் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பதவி உயர்வுடன் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராடி வருகிறோம். ஆனால், அரசு பாராமுகமாக உள்ளது. எனவே, எங்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தற்செயல் விடுப்பு எடுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். தற்போது வருவாய்த்துறை ஊழியர்கள், குண்டர்களால் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளை, அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், அடுத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.