கிராம உதவியாளர் பணி வயது வரம்பில் தளர்வு வருவாய் துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு, வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை பணிகளில், மக்கள் முதலில் கிராம நிர்வாக அலுவலர்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவ, ஒரு கிராமத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, இதற்கான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், தமிழகம் முழுதும் காலியாக உள்ள, 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வருவாய் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில், வருவாய் துறை உயரதிகாரிகள், தேர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர், அந்தந்த கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். எனவே, தாசில்தார் வாயிலாக, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அத்துடன், பொதுப்பிரிவினருக்கு, 30ம்; இதர பிரிவினருக்கு, 35ம் வயது வரம்பாக அறிவிக்கப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு மட்டும், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து பிரிவினருக்கும், வயது வரம்பில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய் துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு: கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில், கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கலாம். அதாவது, பொதுப்பிரிவினருக்கு, 32; பி.சி., - எம்.பி.சி., - டி.என்.சி., பிரிவினருக்கு, 39; எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு, 42 ஆண்டுகள் என, வயது வரம்பை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.