உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மறுசீரமைக்கப்பட்ட மின்சார திட்டம்: கம்பங்கள் தரமற்று இருப்பதாக புகார்

 மறுசீரமைக்கப்பட்ட மின்சார திட்டம்: கம்பங்கள் தரமற்று இருப்பதாக புகார்

சென்னை: மத்திய அரசின் மறு சீரமைக்கப்பட்ட, மின் வினியோக திட்டத்தில் பயன்படுத்தப்படும் மின் கம்பங்கள் தரமற்று இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மின்சாரத்தை, ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்யமாக குறைக்க, மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில், தமிழக கிராமங்களில், விவசாயத்திற்கு தனி வழித்தடத்தில், மின்சாரம் 33/11 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளுக்கு தேவையான மின் கம்பங்கள் மற்றும் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களை, மின் வாரியம் கொள்முதல் செய்து வழங்குகிறது. அவற்றை பயன்படுத்தி, மின் வழித்தடங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை, ஆறு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் மறு சீரமைக்கப்பட்ட திட்டப் பணிகளை, 8,932 கோடி ரூபாயில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த, 2023 - 24ல் துவக்கப்பட்ட பணிகளை, வரும் 2028 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும். திட்டமிட்டபடி முடித்து விட்டால், 60 சதவீத நிதியான, 5,359 கோடி ரூபாய் மானியமாகி விடும். அதை திருப்பி செலுத்த தேவையில்லை. இல்லையெனில், வட்டியுடன் மொத்த நிதியையும் செலுத்த வேண்டும். பல மாநிலங்கள் அந்த திட்ட பணிகளை, 50 - 60 சதவீதம் மேல் முடித்த நிலையில், தமிழகத்தில் இன்னும், 20 சதவீதம் கூட முடியவில்லை. இந்த பணிகளை விரைவாக முடிக்குமாறு, தமிழக மின் வாரியத்தை, மத்திய மின் துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால், அவசரகதியில் மின் கம்பங்கள் தயாரித்து வழங்குவதால், தரமற்று இருப்பதாக புகார்கள் எழுகின்றன. இது குறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது: மின் வாரிய உற்பத்திக் கூடங்களில் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக மின் கம்பங்கள் தயாரிக்கப்படுகின்றன. தனியாரிடமும் வாங்கப்படுகிறது. சிமென்ட், இரும்பு கலவை பயன்படுத்தி, கம்பத்தை தயார் செய்ததும், 29 நாட்கள் தண்ணீரில் ஊற விட வேண்டும். அப்போது கம்பம் பலமாகும். இதை சரியாக பின்பற்றாமல், கம்பங்கள் அவசரகதியில் மறு சீரமைக்கப்பட்ட மின் திட்டப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலாண்மை முகமை தரம் குறைவாக இருப்பதால், சாதாரண மழைக்கே கம்பங்கள் சேதமடைகின்றன. எனவே, தரமான கம்பம் வாங்குவதை, உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தில் பயன்படுத்தப்படும் சாதனங்களின் தரம், மத்திய அரசு நியமித்துள்ள, மூன்றாம் தரப்பு தர மேலாண்மை முகமை வாயிலாக சோதிக்கப்படுகிறது. அந்நிறுவனம், தரமற்ற சாதனங்கள் இருப்பதை உறுதி செய்தால், அதை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. தரத்தை உறுதி செய்த பின்பே சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ