ரயில் நிலையங்களுக்கு குழுவாக வரும் திருடர்கள்; பயணியர் உஷாராக இருக்க ஆர்.பி.எப்., எச்சரிக்கை
சென்னை : ரயில் நிலையங்களில் பயணியரை திசை திருப்பி, பொருட்களை திருடிச் செல்ல, பயணியர் போர்வையில் குழுவாக வரும் திருடர்களை பிடிக்க, ரயில்வே பாதுகாப்பு படையான, ஆர்.பி.எப்., கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 725 ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உட்பட, பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ரயில் நிலையங்களுக்கு பயணியர் போல வரும் சிலர், மொபைல் போன், நகை மற்றும் பணம் திருடுவதுடன், கஞ்சா, ரேஷன் அரிசி கடத்தல் போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். சோதனை
குறிப்பாக, நெரிசல் மிக்க நேரங்களில், பயணியரை திசை திருப்பி, பொருட்களை திருடிச் செல்ல இவர்கள் குழுவாக வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
முக்கிய ரயில் நிலையங்களில், கடந்த ஒரு வாரத்தில், பயணியரின் மொபைல் போன், பர்ஸ், நகைகள் திருடுபோவது, திடீரென அதிகரித்துள்ளன. இதுகுறித்து ஆய்வு நடத்தியதுடன், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டோம். அதில், நெரிசல் மிக்க இடங்களில், சிலர் குழுவாக வந்து, பொதுமக்களிடம் பொருட்களை திருடிச் செல்வது தெரிய வந்தது. இந்த நபர்கள், கடற்கரை, வணிக வளாகங்கள், ரயில் மற்றும் பஸ் நிலையங்களில், கூட்ட நெரிசலில் திருடுகின்றனர். ஒரு இடத்தில் திருடினால், ஒரு மாத இடைவெளிக்கு பிறகே, மீண்டும் அங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதுவரை, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பண்டிகை ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வர உள்ளதால், பயணியர் உஷாராக இருக்க வேண்டும் என, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழுவாக செயல்படும் திருடர்களை பிடிக்க, ரயில் நிலையங்களில் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பிடிபட்டவர்களின் புகைப்படங்களை, 'வாட்ஸாப்' குழுக்களில் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்தும் வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.