உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலையை தடுக்க முற்படாத இன்ஸ்.,சுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கொலையை தடுக்க முற்படாத இன்ஸ்.,சுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை:கூலிப்படையினரால் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தும், கொலையை தடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.ஆணையத்தில், தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் தாக்கல் செய்த மனு:கடந்த 2019ல், என் சகோதரரான வழக்கறிஞர் ரஞ்சித்குமாருக்கும், சிலருக்கும் இடையே தென்னந்தோப்பை நிர்வகிப்பதில் பிரச்னை இருந்தது. எதிர் தரப்பினர் என் சகோதரரை, கொலை செய்ய முயற்சித்தனர். இது தொடர்பாக, கம்பம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாவிடம் புகார் அளித்தேன். போலீஸ் விசாரணையில், என் சகோதரரை கொலை செய்ய, எதிரிகள் கூலிப்படையினரை அணுகியதும் தெரிய வந்தது. ஆனாலும், இன்ஸ்பெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த, 20 நாட்களில் என் சகோதரர் படுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், ரஞ்சித்குமாரை காப்பாற்றி இருக்கலாம். எனவே, இந்த கொலையை தடுக்கும் கடமையிலிருந்து தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், 'மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையில், கம்பம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. 'எனவே, ரஞ்சித்குமாரின் சகோதரர் செல்வேந்திரனுக்கு, தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தத் தொகையை, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூலிக்க வேண்டும்' என்று பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி