விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்
சென்னை:முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: சென்னையில் நேற்று நடந்த ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் நான்கு பேர், தங்கள் கணவர்களுடன் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அய்யூர் அகரம் பாலம் அருகில், அவர்களது கார் எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆசிரியை சிவரஞ்சனி, ஆசிரியை மெஹருன்னிஷாவின் கணவர் ஷாகுல் அமீது ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மெஹருன்னிஷா, பூவிழி, கவுசல்யா, பிரகாஷ், முருகன், சூரியா ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும். பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.