உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் மாளிகையில் குடியரசு தின தேநீர் விருந்து ஆளுங்கட்சி புறக்கணிப்பு; எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

கவர்னர் மாளிகையில் குடியரசு தின தேநீர் விருந்து ஆளுங்கட்சி புறக்கணிப்பு; எதிர்க்கட்சிகள் பங்கேற்பு

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி, கவர்னர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தை, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரம் எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையிலான மோதல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் ரவி நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தியில், தமிழக அரசை கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தார். அதற்கு, அமைச்சர் மதிவேந்தன் பதில் அளித்திருந்தார். நேற்று காலை மெரினா கடற்கரையில் நடந்த, குடியரசு தின விழாவில், கவர்னர், முதல்வர் பங்கேற்றனர்.மாலை 4:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சான்றிதழ்

இதில் பங்கேற்க, விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், பழங்குடியினர், கைவினைஞர்கள், தொழில் முனைவோர், தொழில் துறையினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர். ஆன்மிகத் தலைவர்கள், சமூக சேவகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், முதியோர் என, ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன; தமிழக அரசு சார்பில், யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.நேற்று மாலை, தேநீர் விருந்து துவங்கியது; கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சமூக சேவகர்கள், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியருக்கு, கவர்னர் ரவி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். கடந்த 2023ம் ஆண்டு அதிக கொடி நாள் வசூல் செய்த, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்.பெரம்பலுார் கலெக்டர் கோகுல், மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவநீதன் ஆகியோருக்கு, சுழற் கோப்பைகளை வழங்கினார்.

பங்கேற்பு

ஆளுங்கட்சியான தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், விருந்தை புறக்கணித்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.பி., பாலகங்கா பங்கேற்றனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நடிகர் சரத்குமார், தே.மு.தி.க., மாநில துணை செயலர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, த.மா.கா., தலைவர் வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் கவர்னர்கள் நாராயணன், தமிழிசை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், முப்படைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவியர்

ஏமாற்றம்சென்னை கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதில் சிறப்பாக நடனமாடும், பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு முறையே, முதல் மூன்று பரிசுகள், மாலை கவர்னர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தின்போது, கவர்னரால் வழங்கப்படும். இதை பெற, பள்ளி, கல்லுாரி மாணவியர் இடையே, கடும் போட்டி இருக்கும்.அதேபோல், அரசு துறை வாகனங்கள், அணிவகுப்பில் பங்கேற்கும். சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு, தேநீர் விருந்தின்போது பரிசுகள் வழங்கப்படும். இதை பெற, துறை அதிகாரிகள் விரும்புவர்.தற்போது, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதல் காரணமாக, முதல் மூன்று பரிசுகளுக்கான மாணவியர் மற்றும் வாகனங்கள் நேற்று தேர்வு செய்யப்படவில்லை. அந்த பட்டியல் கவர்னர் மாளிகைக்கு, அரசு சார்பில் வழங்கப்படாததால், தேநீர் விருந்தில், மாணவியருக்கு பரிசு வழங்கப்படவில்லை. இதனால், மாணவியர் ஏமாற்றம் அடைந்ததுடன் தேநீர் விருந்திலும் பங்கேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை