ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி
சென்னை:தமிழ் மொழிக்கான இந்த ஆண்டின், 'சாகித்ய அகாடமி' விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் -- 1908' ஆய்வு நுாலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின், 'சாகித்ய அகாடமி' இலக்கிய அமைப்பு, நாட்டில் உள்ள, 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்குகிறது. இந்த ஆண்டு, தமிழ் மொழிக்கான விருது, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் - 1908' என்ற நுாலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியான எட்டு கவிதை, மூன்று நாவல், இரண்டு சிறுகதை, மூன்று கட்டுரை, மூன்று இலக்கிய திறனாய்வு, ஒரு நாடகம், ஒரு ஆய்வு நுால்களுக்கு, விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வங்காளம், டோக்ரி, உருது மொழிக்கான விருதுகள், பின்னர் அறிவிக்கப்படும் என, அகாடமி செயலர் ஸ்ரீனிவாசராவ் தெரிவித்து உள்ளார்.புது டில்லி, காமணி அரங்கில், அடுத்த ஆண்டு மார்ச் 8ல் நடக்கும் விழாவில், சாகித்ய அகாடமி விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற உள்ள, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் - 1908' நுாலை, பாரதிபாலன், இமையம், மறைமலை இலக்குவனார் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது.புத்தகத்தில் என்ன?
கடந்த 1908, மார்ச் 13, வெள்ளிக் கிழமை, விடுதலை போராட்ட வீரர் வ.உ.சி., கைது செய்யப்பட்டார். இந்த செய்தியை கேட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி மக்கள் தெருவில் இறங்கி போராடினர்; வேலை நிறுத்தம் செய்தனர்; அரசு சொத்துக்களை அழித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷ் அரசு, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த எழுச்சியை அடக்க, பிரிட்டிஷ் அரசு எடுத்த நடவடிக்கைகளையும், வ.உ.சி.,யின் நிலைப்பாட்டையும், தரவுகளின் வாயிலாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நுால். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில், பேராசிரியராக பணியாற்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, சென்னை பல்கலை, சிகாகோ பல்கலை, சிங்கப்பூர் பல்கலை ஆகியவற்றில் பணியாற்றியவர். புதுமைப்பித்தன், பாரதியார், வ.உ.சி., உள்ளிட்டோரின் படைப்புகளையும், தமிழ் இலக்கியம், தமிழக வரலாறுகளையும் எழுதி உள்ளார். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இரட்டிப்பு மகிழ்ச்சி- முதல்வர் ஸ்டாலின்
நாற்பது ஆண்டுகளாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக, சுதேசி நுாலை ஆ.இரா.வேங்கடாசலபதி கொண்டு வந்த வேளையில், அவரது, 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.,யும் - 1908' நுால் சாகித்ய அகாடமி விருது பெறுவது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. 'கலகம்' என அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதை திருத்தி, நம் 'எழுச்சி' என பதிவு செய்த, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு வாழ்த்துகள்.
'மக்கள் எழுச்சி குறித்த ஆய்வு நுால் இது'
விருது பெற்றது குறித்து, வேங்கடாசலபதி கூறியதாவது: 'சாகித்ய அகாடமி' விருது, பெரும்பாலும் படைப்பு இலக்கியங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், ஆய்வு நுாலுக்கு இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டு இருப்பதை, நம்ப முடியவில்லை. நுாலின் இலக்கிய தகுதியை ஆராய்ந்து, விருதுக்கு தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு நன்றி. நான் பல நுால்களை எழுதி இருந்தாலும், விடுதலைப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படுபவருமான தியாகி வ.உ.சிதம்பரத்திடம் இருந்து தான் என் ஆய்வும், கல்வியும் துவங்கி, தொடர்கிறது.இந்நிலையில், வ.உ.சி., குறித்த நுாலுக்கு, அதுவும், அவர் வாழ்வில் மிக முக்கிய நிகழ்ச்சியாக, வரலாற்றில் குறிக்கப்படும் திருநெல்வேலி எழுச்சி குறித்த நுாலுக்கு, விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 'பிரிட்டிஷ் அரசை எதிர்ப்போரை, எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்து, அதிகபட்ச தண்டனை வழங்கலாம்' என, 'செடிஷன் கமிட்டி' எனும் ராஜ துரோக கமிட்டி கூறியது. அந்த குழுவின் தலைவராக இருந்தவர் தான், சர் சிட்னி ரவுலட் என்ற பிரிட்டிஷ்காரர். அதனால், அந்த சட்டத்துக்கு ரவுலட் சட்டம் என்றே பெயர். அதை எதிர்த்து, காந்தி சத்தியாகிரகம் நடத்தினார். இந்த சட்டத்தை எதிர்த்து, தமிழகத்தில் மிகக்குறைந்த அளவில்தான் போராட்டங்கள் நடந்தன.அதில் முக்கியமான போராட்டம் திருநெல்வேலி எழுச்சி. இதை ஆங்கிலத்தில், 'திருநெல்வேலி ரயட்ஸ்' என்றும், தமிழில், திருநெல்வேலி கலகம் அல்லது கலவரம் என்றும் கூறுவர்.ஆனால், உண்மையில் அது கலவரம் அல்ல; மிகப்பெரும் மக்கள் எழுச்சி. வ.உ.சி., 1908, மார்ச் 12ல் கைது செய்யப்பட்ட மறுநாள், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரண்டு நகரங்களிலும், மக்கள் தன்னெழுச்சி பெற்று, அரசு சொத்துக்களை எரித்தனர். அதை தடுக்க வந்த போலீசாரையும் எதிர்த்தனர். இதை எதிர்த்து, போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்; நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்றனர். அதாவது, வ.உ.சி.,யை நேசித்த, அனைத்து மதம், ஜாதியை சேர்ந்த மக்களின் கோபத்தால் எழுந்த எழுச்சியாக இதை பார்க்கலாம். அவர், அனைவருக்குமான தலைவராக இருந்துள்ளார் என்பதை, இதனால் அறிய முடியும். இதை கவனித்த பிரிட்டிஷ் அரசு, அந்த மக்களை ஒடுக்க, தண்டப் போலீஸ் படை என்ற படையை நிறுவியது. அந்த போலீஸ் படைக்கான சம்பளத்தை, மக்களிடம் இருந்து வசூலித்து கொடுத்தது. இப்படிப்பட்ட மிக முக்கியமான மக்கள் எழுச்சி குறித்த ஆய்வு நுாலுக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.