உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஜிட்டலுக்கு மாறாத ஆசிரியர்கள்; பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி

டிஜிட்டலுக்கு மாறாத ஆசிரியர்கள்; பள்ளிக்கல்வித்துறை கிடுக்கிப்பிடி

சென்னை : அரசு பள்ளிகளில், 'டிஜிட்டல் போர்டு'களையும், புதிய செயலிகளையும் பயன்படுத்தாத ஆசிரியர்களை கண்காணிக்கும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப, மாணவர்களுக்கான கற்பிக்கும் சூழலும் மாறி வருகிறது. அதன் அடிப்படையில், 20,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், மின்னணு திரைகளும், இணையதள வசதியும் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆசிரியர்கள், அவற்றை காட்சிப் பொருளாகவே வைத்துள்ளதாக, அந்தந்த பள்ளிகள் அமைந்துள்ள ஊர்த் தலைவர்கள், கவுன்சிலர்கள், பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அனுப்பி உள்ளனர்.இதையடுத்து, அனைத்து ஒன்றியத்திலும் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும், தங்களிடம் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும், 'ஹைடெக்' ஆய்வகத்தையும் பயன்படுத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது; ஆனாலும், ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், இந்த மாதத்தில் இருந்து, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, 'மணற்கேணி' என்ற செயலி வாயிலாக, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான காணொலிகள், விளக்கங்களை, மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள், தங்களின் மொபைல் போன், 'லேப்டாப்' உள்ளிட்டவற்றில், அந்த செயலியை பதிவிறக்கம் செய்யவில்லை. பதிவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இதனால், ஆசிரியர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ள அதிகாரிகள், டிஜிட்டல் போர்டில், மணற்கேணி செயலி வாயிலாக பாடம் நடத்துவதை, புகைப்படம் எடுத்து, வட்டார கல்வி அதிகாரிகளுக்கு ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், பள்ளிகளில் நேரடியாக இதை ஆய்வு செய்யவும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.V.Srinivasan
பிப் 05, 2025 11:07

கல்வி துறை மந்திரிக்கு டிஜிட்டல் பற்றி எதாவது தெரியுங்களா?


V.Rajasudha Shivanya
பிப் 04, 2025 19:22

அரசு பள்ளிகளில் படித்து , அரசு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று யாருக்கும் கையூட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அரசு பள்ளிகளில் பணியாற்றும் என் போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிலர் பதிவிடும் கருத்துகளை பார்க்கும் போது மனஉளைச்சல் ஏற்படுகின்றது. யாரோ ஒருவரிடம் உள்ள சுணக்கம் அனைத்து ஆசிரியர்களையும் பழி சொல்வது எவ்விதத்திலும் ஞாயம் இல்லை...


Bhaskaran
பிப் 04, 2025 18:33

மூன்றாண்டுக்கு ஒரு முறை தகுதி தேர்வு வைத்து பெயரிலான வாத்தியார்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கனும். தேறவில்லை யென்றால் டிஸ்மிஸ் அல்லது சம்பளம் 25விழுக்காடு குறைக்கனும் . இன்கிரிமெண்ட் தரக்கூடாது. இவங்க கிட்ட படிக்கும் பிள்ளைகளின் தரம் எப்படி இருக்கும்.


Kasimani Baskaran
பிப் 04, 2025 07:05

பெஞ்ச் தேய்ப்பவர்களை வைத்து ஒப்பேற்ற முடியாது. தகுந்த பயிற்சியும் ஊக்குவிப்பும் அவசியம். அது இல்லை என்றால் எந்த வேலையும் சாதாரண வேலையாகத்தான் இருக்கும்.


J.V. Iyer
பிப் 04, 2025 04:12

நல்ல, அறிவுள்ள, அர்ப்பணிப்புள்ள, தகுதி நிறைந்த, கற்பிப்பதில் ஆர்வம் உள்ள ஆசிரியர்களை முதலில் நியமிக்கவேண்டும். பிறகு அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கவேண்டும். லஞ்சம் வாங்கி வேலை கொடுத்தால் இப்படித்தான். நாளைய தமிழகம் நல்ல ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது..


புதிய வீடியோ