உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராயல் கேபிள் விஷனில் போலீஸ் சோதனை

ராயல் கேபிள் விஷனில் போலீஸ் சோதனை

மதுரை : மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் குடும்பத்தினருக்கு சொந்தமான ராயல் கேபிள் விஷன் ( ஆர்.சி.வி.,) நிறுவனத்தில் நேற்று இரவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். ஆண்டாள்புரத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மூன்றாவது மாடியில் ஆர்.சி.வி.,அலுவலகம் இயங்கி வருகிறது. மதுரை ஜே.எம்.,கோர்ட் (4) அனுமதியுடன் ஆர்.சி.வி.,யில் நேற்று இரவு 8.30 முதல் நள்ளிரவு 11.15 மணி வரை போலீஸ் உதவி கமிஷனர்கள் வெள்ளத்துரை, கணேஷன், இன்ஸ்பெக்டர்கள் நேதாஜி, செந்தில் இளந்திரையன், வீடியோ குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பொறுப்பாளர் செல்வராஜ் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்தனர். நிர்வாக இயக்குனர் ராஜூபிரபு பெயரில் உரிமம் பெற்றுள்ளது தெரியவந்தது. போலீஸ் அதிகாரி ஒருவர்,''கேபிள் 'டிவி' ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ளனரா? முறையாக பராமரிக்கின்றனரா? விதி மீறல்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்தோம். ஆவணங்களை பார்வையிட்டோம்,'' என்றார். ஆர்.சி.வி.,அலுவலகம் முன் தி.மு.க.,வினர் திரண்டனர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.திருநெல்வேலி: நெல்லை, வண்ணார்பேட்டையில் சன்குழுமத்தின் 'கரன்', 'கரன் மியூசிக்' என்ற உள்ளூர் கேபிள் 'டிவி' சேனல்கள் இயங்குகின்றன. நேற்று மாலை இந்நிறுவன அலுவலகத்தில் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ, பாளையங்கோட்டை உதவி கமிஷனர் ராஜ்மோகன், தாசில்தார் கதிரேசன் மற்றும் போலீஸ், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கான அனுமதி பெற்ற ஆவணத்தை காட்டுமாறு அங்கிருந்தவர்களிடம் வலியுறுத்தினர். 5.10 மணிக்கு துவங்கிய சோதனை 6.50 மணிக்கு முடிந்தது. திருச்சி: திருச்சி நகரில் செயல்படும், எஸ் 'டிவி', டென் 'டிவி' மற்றும் கிளாக் 'டிவி' அலுவலகங்களில், போலீசார் நேற்று மாலை திடீரென நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, மூன்று சேனல்களை நடத்தியவர்களும் முறையான அனுமதியின்றி செய்திகளை ஒளிபரப்பியதும், நிகழ்ச்சிகள் குறித்த முறையான ஆவணங்கள் வைக்காததும், அவர்கள் லோக்கல் சேனல் ஆரம்பிக்க தேவையான மூலதனம் எங்கிருந்து வந்தது? என்பதற்கான கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மூன்று உள்ளூர் சேனல்களும் முடக்கப்பட்டன. மூன்று சேனல்களின் ஒளிபரப்பும் உடனடியாக நிறுத்தப்பட்டது. அங்கு இருந்த ஒளிபரப்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.நாமக்கல்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் காந்திச்செல்வனின் தம்பி சுரேஷ். இவர் ஆகாஷ் 'டிவி' எனும் லோக்கல் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அதில், செய்திகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், நேற்று காலை லோக்கல் கேபிள் 'டிவி' அலுவலகங்களில் போலீசார் சோதனையிடச் சென்றனர். அப்போது, ஒளிபரப்பு எதுவும் இல்லை என, அங்கிருந்தோர், போலீசாரிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ