நுாறு நாள் வேலையை விமர்சிக்கும் சீமான் வேலை கேட்டு போராடிய அவரது தாயார்
இளையான்குடி:மத்திய அரசின் நுாறு நாள் வேலை திட்டத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து வரும் நிலையில் அவரது தாய் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுாறு நாள் வேலை கேட்டு அவரது கிராம மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.தாய் அன்னம்மாள் அரணையூர் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மத்திய அரசின் திட்டமான நுாறு நாள் வேலை திட்டத்தை பொதுக்கூட்டம் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.தங்களுக்கு நுாறு நாள் வேலை திட்டம் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி சீமானின் தாயார் அன்னம்மாள் உட்பட அரணையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, இக்கிராம மக்கள் இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று, அரணையூர் கண்மாய்க்கு வரும் வைகையாற்று வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த குழாய்கள் கோர்ட் உத்தரவுப்படி பாதி அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள குழாய்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரணையூர் கண்மாயில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கண்மாய் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.