உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் பொருட்கள் தராமல் மூத்த குடிமக்கள் அலைக்கழிப்பு

ரேஷனில் பொருட்கள் தராமல் மூத்த குடிமக்கள் அலைக்கழிப்பு

சென்னை:ரேஷன் கடைகளில், தங்கள் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்க, அங்கீகார விண்ணப்ப படிவம் வாயிலாக, ஒப்புதல் பெற்றிருக்கும் மூத்த குடிமக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்க, ரேஷன் ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை, மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.முறைகேட்டை தடுக்க, ரேஷன் கார்டில் உள்ள குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர்களின் விரல் ரேகை, விற்பனை முனைய கருவியில் பதிவு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் கடைக்கு சென்று, பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். அவர்கள், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம். இதற்கு, சம்பந்தப்பட்ட கார்டுதாரர், உணவு வழங்கல் துறை அலுவலகங்களில், அதற்கான அங்கீகார விண்ணப்ப படிவம் வாங்கி, தன் சார்பில் செல்லக்கூடிய நபரின் விபரங்களை எழுதி, ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், சராசரியாக, 5 முதல் 10 பேர், தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்ப படிவம் வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளனர். இந்த சேவைக்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெறும் வசதியை, உணவுத்துறை கடந்த மார்ச்சில் துவங்கியது. தற்போது, பல கடைகளில் படிவம் வழங்கி, ஒப்புதல் பெற்ற மூத்த குடிமக்களுக்கு, பொருட்கள் வழங்க மறுப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:தங்களின் சார்பில், வேறு நபரை அனுப்ப, உரிய முறையில் அங்கீகார படிவம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த நபருக்கு பொருட்களும் வழங்கப்பட்டன. தற்போது, கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், திடீரென, 'விண்ணப்பப் படிவத்தில் ஒப்புதல் பெற்றது ஏற்கப்படாது; இணையதளத்தில் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்றால் தான் பொருட்கள் வழங்கப்படும்' என, கடை ஊழியர்கள் கூறி, பொருட்கள் தர மறுக்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. இணையதளத்தில் விண்ணப்பம் செய்வது தொடர்பாக, எந்த விபரமும் அதிகாரப்பூர்வமாக, அரசின் சார்பில் வெளியிடப்படாத நிலையில், எப்படி விண்ணப்பித்து, ஒப்புதல் பெற முடியும். எனவே, படிவம் வாயிலாக, ஒப்புதல் பெற்றவர்களுக்கு, தொடர்ந்து பொருட்களை தடையின்றி வழங்க, அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை