உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜிக்கு மாதம் 1.05 லட்சம் ரூபாய் சம்பளம்

செந்தில் பாலாஜிக்கு மாதம் 1.05 லட்சம் ரூபாய் சம்பளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

செங்கம்: ''அரசு வேலையே செய்யாமல், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, மக்களின் வரிப்பணத்தில் மாதம், 1.05 லட்சம் ரூபாய் என, எட்டு மாதமாக, 8.40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கும் ஆட்சியாக, தி.மு.க., உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டசபை தொகுதியில் நேற்று (ஜன., 31) நடந்த, 'என் மண், என் மக்கள்' நடைபயணம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நாம் அனைவரும் அரசியல் மாற்றத்திற்கு தயாராகி இருக்கிறோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என, தெள்ளத்தெளிவாக இருக்கிறோம். நம்மை ஆண்ட கட்சியும் வேண்டாம்; ஆளுங்கட்சியும் வேண்டாம். மோடி வேண்டும் என்பதிலே, நாம் மிக தெளிவாக இருக்கிறோம். தமிழகத்தில் மகனையும், மருமகனையும் மையப்படுத்தி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மகளிர், இளைஞர், பெண்கள், ஏழைகளுக்கான ஆட்சி நடக்கவில்லை.தேர்தல் அறிக்கை என ஒவ்வொரு தேர்தலிலும், பொய் சொல்லி ஓட்டு வாங்கிச் செல்கின்றனர். தேர்தல் நேரத்தில், தி.மு.க., அளித்த, 511 தேர்தல் வாக்குறுதிகளில், 31 மாத ஆட்சிக் காலத்தில், 20ஐ கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; எதையும் செய்யாத அரசு நமக்கு வேண்டாம்.தமிழகத்தில், செந்தில் பாலாஜிக்கு அறிமுகமே தேவையில்லை. அவர் லஞ்சம் வாங்கி கைதாகி, புழல் சிறையில், 230 நாட்களாக உள்ளார். அரசு வேலை செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், 48 மணி நேரம் சிறையில் இருந்தால், அவருடைய பதவியை பறிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி இன்னும் பறிக்கப்படாமல், இலாகா இல்லாத அமைச்சர் என, ஸ்டாலின் வைத்துள்ளார்.அப்படி என்றால் என்ன அர்த்தம். மாதா மாதம், மக்களது வரிப்பணத்தில், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டு மாதமாக, 8.40 லட்சம் ரூபாய், வேலையே செய்யாமல், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்றமே நியாயமா என்று கேட்டுள்ளது. அதனால் தான், தி.மு.க., அரசை ஊழல் அரசு, ஊழல் செய்வோரை காப்பாற்றுகின்ற அரசு என்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

செந்தில் பாலாஜி காவல்; 18வது முறையாக நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 18வது முறையாக நீட்டித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்தாண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டார்; 3,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 22ல் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், விசாரணையை தள்ளிவைக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரணையை முடக்கும் நோக்கில், செந்தில் பாலாஜி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக, அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அதற்கு பதிலளித்து வாதாட, செந்தில் பாலாஜி சார்பில் அவகாசம் கோரியதை ஏற்று, ஜன., 31க்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி விடுமுறை என்பதால், 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் விசாரித்தார்.அப்போது, புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 18வது முறையாக, வரும் 7ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை