உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் ஸ்டாண்டில் மணல் கடத்தல் சி.பி.சி.ஐ.டி., விசாரணை உறுதி

பஸ் ஸ்டாண்டில் மணல் கடத்தல் சி.பி.சி.ஐ.டி., விசாரணை உறுதி

மதுரை,:திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணியின்போது தோண்டிய மணலை கடத்தியது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிட்டதை, மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருநெல்வேலியை சேர்ந்த சுடலைகண்ணு என்பவர், 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருநெல்வேலி சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் சீரமைப்புப் பணி நடந்தது. அங்கு தோண்டிய மணல், திருநெல்வேலி மாநகராட்சியின் சில அலுவலர்களின் உடந்தையுடன் கேரளாவிற்கு கடத்தப்பட்டது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் 2020ல் பொதுநல மனு தாக்கல் செய்தார்.அதை, 2021ல் விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'மணல் கடத்தப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும். சென்னை பல்கலை கனிம வளத்துறையின் உதவியை பெற்றுக் கொள்ளலாம்' என உத்தரவிட்டனர். இதில் சில முரண்பாடுகள் உள்ளதாகவும், மறு ஆய்வு செய்யக் கோரியும் திருநெல்வேலி மாநகராட்சி தரப்பில் மனு செய்யப்பட்டது.அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.புகழேந்தி அமர்வு: மறுஆய்வு செய்ய விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தொடர வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ