சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் சமூக ஆர்வலர்கள், கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கேள்வி கேட்டாலே மிரட்டப்படுகின்றனர்' என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மயிலாடுதுறையில், இரண்டு இளைஞர்களை, கள்ளச்சாராய கும்பல் படுகொலை செய்துள்ளது. சாராய விற்பனை குறித்து, பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய, காவல் துறையின் அலட்சியத்தால், இருவர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், தினமும் நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகவும், கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. சில நாட்களுக்கு முன்பு, அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லை எனக்கூறிய நடிகர் கஞ்சா கருப்பு மிரட்டப்படுகிறார்.தி.மு.க., ஆட்சியில், கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும், தமிழகம் முதன்மை மாநிலமாக நிற்கிறது. இதனால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காதே நாட்களே இல்லை என்ற அளவிற்கு, குழந்தைகள், பெண்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.இதில், மயிலாடுதுறையில் இருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு, முன்விரோதம் காரணம் என, போலீசார் விளக்கம் அளிப்பது வியப்பளிக்கிறது. முன் விரோதம் ஏற்படக் காரணம் சாராய விற்பனைதானே. அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனப் போலீசார் நினைத்தால், குற்றத்தை தடுக்க முனைய வேண்டும். குற்றம் நடந்ததற்கான காரணத்தை மறைக்க முயலக்கூடாது. இனியாவது கள்ளச்சாராய விற்பனையை போலீசார் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மிரட்டலுக்கு பயந்த கஞ்சா கருப்பு!
சென்னை சின்னப்போரூர் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சில தினங்களுக்கு முன்பு, கால்வலிக்கு சிகிச்சை பெற, நடிகர் கஞ்சா கருப்பு சென்றார். வெகுநேரம் காத்திருந்தும், டாக்டர்கள் வரவில்லை. நர்ஸ்களிடம் விசாரித்தபோது, முறையாக பதில் இல்லை. கோபமடைந்த அவர், மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியானது.அடுத்த நாள், இதுகுறித்து பேசிய, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், ''இதற்கு மேல் பேசினால், கஞ்சா கருப்புக்கு தான் பிரச்னை'' என்றார்.இதையடுத்து, அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்த கஞ்சா கருப்பு, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லை எனக் கூறிய, பிரபல காமெடி நடிகரே, மிரட்டலுக்கு பயந்த நிலையில், ஏழை மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.