உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குறுவைத்தொகுப்பு மானியத்தை அரசாணையாக வெளியிட வேண்டும் தென் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு

குறுவைத்தொகுப்பு மானியத்தை அரசாணையாக வெளியிட வேண்டும் தென் மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு

மதுரை : டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுவைத்தொகுப்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.5000 வரை வழங்கப்படுகிறது. இந்தாண்டு பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அரசாணையாக வெளியிட வேண்டும் என தென்மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தஞ்சாவூர், திருவாரூர் உட்பட டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12 ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் போது ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயிகளுக்கு குறுவைத்தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 2 மூடை யூரியா, ஒரு மூடை டி.ஏ.பி., அரை மூடை பொட்டாஷ் உரங்கள், மானிய விலையில் நெல் விதைகள், நெல் பயிரிடுவதற்கு முன்பாக விதைக்கப்படும் தக்கைப்பூண்டு விதைகள் என ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு ரூ.5000 வரை மானியம் கிடைக்கிறது.தென் மாவட்டங்களிலும் பல ஆண்டுகளாக குறுவை நெல் சாகுபடி செய்கிறோம். மானியத் தொகுப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதை அரசாணையாக வெளியிட்டால் மட்டுமே விமோசனம் கிடைக்கும் என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள். அவர்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் ஜூன் 2ல் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்படும் போது மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். எங்களுக்கு எந்த மானிய சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை. எங்களுக்கும் இச்சலுகை வேண்டுமென மூன்றாண்டுகளாக நடந்த வேளாண் பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கேட்பு கூட்டத்தில் தெரிவித்து வருகிறோம். இந்த முறை மானியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அரசாணையாக வெளியிட்டால் வரும் ஜூன் மாத குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் பயன்பெறுவர்.

டிரம் சீடர் கருவிகள் தேவை

தேசிய வேளாண் அபிவிருத்தி போன்ற திட்டங்களின் கீழ் மாவட்டங்களில் வட்டாரத்துக்கு ஒன்றிரண்டு டிரம் சீடர் கருவிகள் ரூ.4000 மானிய விலையில் தரப்படுகிறது. நெல் நாற்று நடுவதற்கு ஆட்கள் கிடைக்காத நிலையில் 'டிரம் சீடர்' கருவியில் நெல்லை கொட்டினால் உருளும் போது துளைகளின் வழியே நெல் விதைகள் சீராக வயலில் துாவப்படுகிறது. இதனால் ஆட்கூலியும் நேரமும் மிச்சமாகிறது. வேளாண் துறையின் கீழ் வட்டாரத்துக்கு10 கருவிகள் மானிய விலையில் வழங்கினால் சுற்றியுள்ள பகுதி விவசாயிகளும் பயன்படுத்த முடியும் வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை