கோர்ட் அருகே நடக்கும் கொலைகளை தடுக்க டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படை
சென்னை:நீதிமன்றங்கள் அருகே, பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், ரவுடிகளின் எதிரிகளை கண்காணிக்க, மாவட்டந்தோறும் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.இரு தினங்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே, மாயாண்டி என்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் மீது, கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. போலீஸ் விசாரணையில், பழிக்கு பழியாக இக்கொலை நடந்தது தெரிய வந்துள்ளது.இச்சம்பவத்திற்கு பின், மாநிலம் முழுதும் உள்ள நீதிமன்றங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 275 நீதிமன்றங்களுக்கு, 550 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணைக்காக ரவுடிகள் நீதிமன்றங்களுக்கு வரும்போது, அவர்களின் எதிரிகளால் பழி வாங்கப்படுவது வாடிக்கை தான். கடந்த, 2023ல், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த, சென்னை தாம்பரம் அருகே, இரும்புலியூரைச் சேர்ந்த ரவுடி லோகேஷ், 28, என்பவர், நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொல்லப்பட்டார்.அதே ஆண்டில், திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராக, காரில் சென்ற ரவுடி ஓணான் செந்தில் கொடூரமாக கொல்லப்பட்டார்.இதுபோன்ற கொலைகளை தடுக்க, மாவட்டந்தோறும் ரவுடிகளின் எதிரிகளை கண்காணிக்க, டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:மாநிலம் முழுதும் உள்ள ரவுடிகள் பட்டியல் தயாரித்து, அவர்கள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட உள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள், அவர்களின் எதிரிகள் யார், பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார் என்பது உள்ளிட்ட விபரங்கள் திரட்டப்பட்டு உள்ளன. குறிப்பாக, ரவுடிகளின் எதிரி குழுக்களை, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார், கண்காணித்து வருகின்றனர். ரவுடிகள் தொடர்பான நீதிமன்ற விசாரணையை கண்காணிக்கவும், தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களும், உளவுத் துறை போலீசாரும் இணைந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வரும், ரவுடிகளுக்கு பாதுகாப்பு அளிப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.