உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தமிழகத்தில் அடுத்த வாரம் துவக்கம்

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி தமிழகத்தில் அடுத்த வாரம் துவக்கம்

சென்னை: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளதாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. சென்னை தி.நகர், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்திய நாராயணன் தாக்கல் செய்த மனு: தி.நகர் சட்டசபை தொகுதியில், 1996ம் ஆண்டு, 2 லட்சத்து, 8,349 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது, 36,656 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்து உள்ளனர். அதாவது, 17.6 சதவீதம் மட்டுமே. மக்கள் தொகைக்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. தி.நகர் தொகுதியில், அ.தி.மு.க., ஆதரவாளர்கள், 13,000 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இறந்தவர்களின் பெயர்கள் இதுவரை நீக்கப் படவில்லை. தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நியாயமாகவும் , நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய, அடுத்தாண்டு சட்டசபை தேர்தலுக்கு முன், தி.நகர் தொகுதியில் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரி பார்த்து, தவறான சேர்க்கை, நீக்கத்தை களைய வேண்டும். இப்பணிகளை விரைவாக முடித்து, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷன் தரப்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ''நாடு முழுதும் தேர்தலை சந்திக்க உள்ள, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பீஹார் மாநிலத்தை போல சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, அடுத்த வாரம் துவங்க உள்ளது. அப்போது, மனுதாரர் தரப்பில் தெரிவித்த புகார்கள் கவனிக்கப்படும்,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று , வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், பீஹார் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிரான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்யுமாறு, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை