பாக்ஜலசந்தி கடலில் இலங்கை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் முதன் முறையாக இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டதால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறையினர் எச்சரித்தனர்.இலங்கையில் ராணுவம்- புலிகள் இடையே போர் தீவிரமடைந்த நிலையில் 1984 முதல் தலைமன்னார் முதல் யாழ்ப்பாணம் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதி விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால் இப்பகுதியில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து செல்வதை தவிர்த்தனர். அதன் பின் 2009ல் இலங்கையில் அமைதி திரும்பியதும் பாக்ஜலசந்தி கடல் பகுதி இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.இந்நிலையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதன் முறையாக பாக்ஜலசந்தி கடலில் கச்சத்தீவு- நெடுந்தீவு இடையே நேற்று இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வரை மீனவர்கள் எல்லை தாண்டி இப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மதியம் 2:00 மணிக்கு மேல் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக கருதப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.