உடுமலை அருகே எஸ்.எஸ்.ஐ., வெட்டிக்கொலை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தோப்பில் நடந்ததால் பரபரப்பு
உடுமலை:உடுமலை அருகே குடும்ப பிரச்னை குறித்த விசாரணைக்கு சென்ற குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., வெட்டி படுகொலை செய்யப்பட்டார்; குற்றவாளிகளை பிடிக்க, ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மடத்துக்குளம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரன் தோட்டத்தில் நடந்த இச்சம்பவம், பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருப்பூர் மாவட்டம் உடுமலை சிக்கனுாத்து கிராமத்தில், மடத்துக் குளம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 60, அவரது மகன் தங்கபாண்டியன், 25, ஆகியோர் வேலை பார்த்தனர். இவர்களை பார்க்க, மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண் டன், 30, நேற்று முன் தினம் சிக்கனுாத்து வந்தார். மகன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இரவு 10:00 மணிக்கு மேல் மது அருந்திய பின், தந்தை, மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட் டது. மூவரும் அரிவாளை கையில் வைத்துக் கொண்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டதுடன், ஒருவரை ஒருவர் தாக்க முயற்சித்தனர். பயங்கர சத்தத்துடன் மற்றும் ஆயுதங்களுடன் மூவரும் சண்டையிட்டது குறித்த தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற பண்ணை மேலாளர் ரங்கசாமி, குடிமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு குடிமங்கலம் எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், 57, போலீஸ் காரர் அழகுராஜா ஆகியோர், நெடுஞ்சாலை ரோந்து ஜீப்பில் சென்றுள்ளனர். அங்கு, மூர்த்தி ரத்த காயத்துடன் இருந்துள்ளார்; மணிகண்டன் சம்பவ இடத்தில் இல்லை. ரத்த காயத்தை பார்த்த எஸ்.எஸ்.ஐ., முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார் . அதற்குள் அங்கு அரிவாளுடன் வந்த மணிகண்டன், அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்துள்ளார். அவருடன் மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், போலீஸ்காரர் அழகுராஜா மற்றும் பண்ணை மேலாளர் ரங்கசாமி அங்கிருந்து தப்பியோடினர். தென்னந்தோப்புக்குள் இருட்டாக இருந்ததால், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலால் நீண்ட துாரம் ஓட முடியவில்லை. அவரை விரட்டிச் சென்ற மணிகண்டன், அரிவாளால் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டியதில், சம்பவ இடத்திலேயே சண்முகவேல் இறந்தார். உடனடியாக, நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் கண்ணாடி, 'வாக்கி டாக்கி' கருவியை அடித்து உடைத்து விட்டு, மூர்த்தி, தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். விசாரணைக்கு சென்ற எஸ்.எஸ்.ஐ., பல மணி நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த குடிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது, தென்னந்தோப்பிலுள்ள மண் பாதையில் அவர் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்னையை விசாரிக்கச் சென்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ., வெட்டி கொல்லப்பட்டது மற்றும் சம்பவம் நடந்த இடம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமானது என்பதால், உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. சம்பவ இடத்தில், தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தனிப்படை அமைப்பு மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் கூறுகையில், ''குற்றவாளிகள் மணிகண்டன் மற்றும் தங்கபாண்டியன் மீது தலா நான்கு வழக்குகள் மற்றும் மூர்த்தி மீது இரு வழக்குகள் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலுவையில் உள்ளன,'' என்றார். அமைச்சர் ஆறுதல் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ.,யின் உடல், பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் மணிஷ் நாரணவரே ஆகியோர், எஸ்.எஸ்.ஐ., குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ''எஸ்.எஸ்.ஐ., குடும்பத்தினருக்கு முதல்வர் 1 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்; முழுமையான விசாரணை நடக்கிறது. யார் ஈடுபட்டனர் என்பது தெரிந்துள்ளதால், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்; விரைவில் சிக்குவர்,'' என்றார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மடத்துக்குளம் - அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரன் கூறுகையில், ''கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., நல்ல மனிதர்; நேர்மையான நபர். இறந்தவரின் மகனுக்கு அரசு வேலை உடனடியாக வழங்க வேண்டும். கொலையில் ஈடுபட்டவர்கள் குறித்தும், அவர்களது ஆவணங்கள் உள்ளிட்டவையும் போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டது, தமிழக காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சண்முகவேல் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.