உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த முதல்வர் நான் என பிதற்றுகிறார் சீமானை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்

அடுத்த முதல்வர் நான் என பிதற்றுகிறார் சீமானை மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின்

சென்னை:''அடுத்த முதல்வர் என, சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்,'' என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை, முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., மாணவர் அணித்தலைவர் ராஜிவ்காந்தி ஏற்பாட்டில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தி.மு.க., வில் நேற்று இணைந்தனர். இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனேயே ஆட்சிக்கு வருவோம் என, சொல்லும் நிலையில் உள்ளன.

அடையாளம்

'நாங்கள் தான் அடுத்த ஆட்சி; நாங்கள் தான் அடுத்த முதல்வர்' என்று சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர் யார், எப்படிப்பட்டவர், எந்தக்கட்சி, எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம், நான் சொல்ல விரும்பவில்லை.காரணம், அவர்களை எல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்கு தயாராக இல்லை; அதுதான் உண்மை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை, கவுரவத்தை, நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. நானாக இருந்தாலும் சரி, உதயநிதியாக இருந்தாலும் சரி, துரைமுருகனாக இருந்தாலும் சரி, என்ன சொன்னோம்; மாற்றுக்கட்சி என்றுதான் சொன்னோம். அந்தக் கட்சியின் பெயரைக் கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன; எத்தனையோ கட்சியின் பெயரைச் சொல்கிறோம். ஆனால், இந்தக் கட்சியின் பெயரைச் சொல்ல, நாங்கள் மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையிலேயே ஒரு அரசியல் கட்சியாக,- மக்களுக்காக பாடுபடும் கட்சியாக, தமிழர்களுக்காக பாடுபடும் கட்சியாக இருந்தால் சொல்லலாம். வேஷமிட்டுக் கொண்டும், ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டும் இருப்பவர்களை எல்லாம், நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை.

கவர்னரை மாற்றுங்கள்

கவர்னர் தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறாரே,- நம்மை எதிர்த்து பேசிக்கொண்டே இருக்கிறாரே,- மதத்தை மையமாக வைத்து பேசுகிறாரே- என்றெல்லாம் வருத்தப்படுவது உண்டு. அவர் பேசட்டும்; அவ்வாறு பேச பேசத்தான் நமக்கு ஆதரவு அதிகமாகிறது. அதனால், சில பேர், 'கவர்னரை மாற்றுங்கள், மாற்றுங்கள்' என சொல்வர். இதுவரை சட்டசபையில், நாங்கள் கவர்னரை மாற்றுங்கள் என, தீர்மானம் போட்டிருக்கிறோமா? அவர் இருக்க வேண்டும்.இருந்தால் தான் தி.மு.க., இன்னும் வளரும். அடுத்த கவர்னர் உரைக்கும், அவர் சட்டசபைக்கு வர வேண்டும். கவர்னர் உரையை நாங்கள் கொடுப்போம். அதை படிக்காமல், அவர் வெளியே செல்ல வேண்டும். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும்; மக்களும் பார்க்க வேண்டும். நான் பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து, நீங்கள் கவர்னரை மாற்றவே மாற்றாதீர்கள். அவரே இருக்கட்டும்; தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.அவ்வாறு பேசிக்கொண்டே இருந்தால் தான், மக்கள் தெளிவாக புரிந்து கொள்வர். மக்கள் யாரும் அவருக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்கள். அதனால், அதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் நம் வேலையைப் பார்ப்போம். மக்களிடத்தில் தந்த வாக்குறுதிகளை,- உறுதிமொழிகளை நம்பி, நம்மிடத்தில் ஆட்சியை ஒப்படைத்திருக்கின்றனர். அந்த உறுதிமொழிகளை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம்.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுதான் இருக்கிறது. நம் சாதனைகளை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதை நினைவுபடுத்தினாலே போதும், 200 அல்ல 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறும் சூழல் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. S. Ramamurthy
ஜன 25, 2025 07:30

What about His Son Udayanidhi - why he wanted to become Deputy Chief Minister so urgently pushing other Seniors. So DMK is owned by Karunanidhi Family and any one can be put in the helm. Others should not think to come up. VICO and others can get only single digit vote if they stand alone as also DMK in many places.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை