ராகுல் நடைபயணத்தில் ஸ்டாலின் பங்கேற்பு: காங்.,
சென்னை: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வரும் 27ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி தலைவர்கள், அதில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று வருவதாக குற்றம்சாட்டி வரும் ராகுல், கடந்த 17ம் தேதி முதல், பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 15 நாட்கள் பீஹாரில் தங்கி, அவர் மேற்கொள்ளும் நடைபயணத்தில், 'இண்டி' கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, வரும் 27ல் நடக்கவிருக்கும் ராகுல் நடைபயணத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ''பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல், தன்னுடைய நடைபயணத்தில், கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களும் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ''அதன் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, வரும் 27ல், ராகுலின் நடைபயணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். ''அவரைப் போலவே, ராகுல் நடைபயணத்தில் பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்பர்'' என தெரிவித்து உள்ளார். வரும் 27ம் தேதி, பீஹார் சென்று, ராகுலின் நடைபயணத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக, தி.மு.க., தரப்பிலும் கூறுகின்றனர். கடந்த 2022 செப்டம்பர் 7ம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய, 'பாரத் ஜோடோ' யாத்திரையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.