உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து ரேஷன் பொருட்களும் ஒரே நேரத்தில் வழங்க நடவடிக்கை

அனைத்து ரேஷன் பொருட்களும் ஒரே நேரத்தில் வழங்க நடவடிக்கை

சென்னை:''ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை, ஒரே நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:தி.மு.க., - அசோக்குமார்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் நெல் சேமிப்பு கிடங்கு இல்லை. ஆத்தாலுார் வீரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கிடங்கு அமைத்து தர வேண்டும். ஒரத்தநாடு அடுத்த பஞ்சநதிகோட்டையில் அமைத்தது போன்று, மெகா நெல் கொள்முதல் நிலையத்தை, பேராவூரணியில் அமைக்க வேண்டும். 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகளை, பகுதி நேர ரேஷன் கடைகளுக்கும் வழங்க வேண்டும். வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும். அனைத்து ரேஷன் பொருட்களும் ஒரே நேரத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.அமைச்சர் சக்கரபாணி: தமிழகத்தில், 37,328 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 2,035 பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு மட்டுமே, பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்படவில்லை. விதிமுறைகளை பின்பற்றி, ரேஷன் கடைகளுக்கு பிரித்து தரப்படும். ஒரே நேரத்தில், அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக, ஒவ்வொரு மாதமும், 15ம் தேதி முதல் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், கடைகளில், 60 சதவீத பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, 1ம் தேதி முதல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒரே நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்று சொன்னால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சி ரதி
ஏப் 16, 2025 10:11

நிலைமை வேறு. 5 தேதிக்குள் ரேஷன் கடைக்கு போனால் தான் ஒரே நேரத்தில் பொருட்கள் கிடைக்கும். இல்லை என்றால் கோதுமை கிடைக்காது. கள நிலவரம் அமைச்சருக்கே தெரியவில்லை.


பல்லவி
ஏப் 16, 2025 04:31

பணியைச் செய்யாமல் சிரிப்பு மந்திரியாக இருந்து ஓரு பயனுமில்லை


முக்கிய வீடியோ