உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து துறை இணையதளத்தில் அரசாணைகள் பதிவேற்றம் நிறுத்தம்

போக்குவரத்து துறை இணையதளத்தில் அரசாணைகள் பதிவேற்றம் நிறுத்தம்

சென்னை: போக்குவரத்து துறை இணையதளத்தில், அரசாணைகள் பதிவேற்றம் செய்யப்படாததால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தகவல்களை தெரிந்து கொள்வதில், சிரமம் ஏற்படுகிறது.போக்குவரத்து துறையின் கீழ், எட்டு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் வாயிலாக இயக்கப்படும், 18,500க்கும் மேற்பட்ட பஸ்களில், 1.80 கோடி பேர் தினமும் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து கழகங்களில், 1.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு அன்றாடம் உதவும் துறையாக, போக்குவரத்து துறை உள்ளது. ஆனாலும், போக்குவரத்து துறையின் செயல்பாடு மந்தமாக உள்ளது. துறையின் இணையதளத்தில், அரசாணைகள் முறையாக பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. கடந்த ஆண்டுக்கு பின், அரசாணை பதிவேற்றம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசின் முடிவுகளை, ஊழியர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

தமிழக அரசின் அனைத்து துறைகளும், புதிதாக வெளியிடப்படும் அரசாணை, துறை ரீதியான கடிதங்களை, உடனுக்குடன் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், போக்குவரத்து துறையின் இணைய பக்கத்தில், இந்த ஆண்டு ஒரு அரசாணை கூட பதிவேற்றம் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு ஒரே ஒரு அரசாணை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதனால், துறை ரீதியான அரசின் முடிவுகளை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, 2020 முதல் வெளியிடப்பட்ட அனைத்து துறை தொடர்பான அரசாணைகளையும், புதிய அரசாணைகளையும் பதிவேற்றம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி