சென்னை: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 30ம் தேதி மாவட்ட தலைநகரங்களில், மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்ட குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், செல்வம், மயில் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு உள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு. உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 22 முதல் 24ம் தேதி வரை, மாநிலம் முழுதும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து, 30 தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம்; பிப்., 5 முதல் 9 வரை, பா.ஜ., -- அ.தி.மு.க., தவிர்த்து பிற அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து, ஆதரவு கோருவது. பிப்., 10 மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது; பிப்., 15ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.அதன் பின்னரும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிப்., 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.