வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்க எல்லாம் அம்புட்டு காசையும் அடிச்சு என்னதான் செய்ய முடியும்....
தமிழக பள்ளிக் கல்வி துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழா போட்டி களில், மாணவர்களுக்கு முறையாக உணவு ஏற்பாடு செய்யாததால், அவர்கள் பசியால் மயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் உள்ள கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில், கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இந்த போட்டியில், போதிய ஒருங் கிணைப்பு இல்லாததால், மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் அவதியடைந்துள்ளனர். இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: இந்தாண்டு, 6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, கிருஷ்ணகிரி; 9, 10ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு கரூர்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு புதுக்கோட்டையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நெருக்கடி
இந்நிலையில், நேற்று முன்தினம் கரூரில் நடந்த போட்டிகளுக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து, போட்டிக்கு முதல் நாள் இரவே மாணவ - மாணவியரை, ஆசிரியர்கள் அழைத்து வந்துஇருந்தனர். அவர்களில் முதலில் வந்தவர்களுக்கு மட்டும்தான், இரவு நேர உணவாக உப்புமா, சட்னி வழங்கப்பட்டது; அதன்பின் வந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், பல மணி நேரம் பயண களைப்பில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் செய்வதறியாது தவித்தனர். சில தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் வாயிலாக வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து வழங்கினர். அதற்கு வாய்ப்பில்லாத ஆசிரியர்கள், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என மாணவ - மாணவியரை உறங்க வைத்தனர். போட்டி நடக்கும் நாளின் காலையிலும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. இதனால், மாணவ - மாணவியர் மயக்கம் அடைந்தனர். பொதுவாக, இந்த போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்கள் நெருக்கடி தருகின்றனர். அதனால், மாணவ - மாணவியருக்கான உடைகள், அலங்கார பொருட்கள் உள்ளிட்ட உப பொருட்களை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால், ஒவ்வொரு போட்டியின்போதும், 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை, எங்களின் சொந்த நிதியை செலவிடுகிறோம். தலைவலி
ஆனாலும், போட்டிக்கு செல்லும் இடத்தில், கழிப்பறை வசதி கூட இல்லாத கல்லுாரி அறைகளில் தங்க வைக்கின்றனர். இது, மாணவியருக்கும், ஆசிரியைகளுக்கும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. மேலும், மாணவர்களுக்கான உணவுக்கு, அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம், அதிகாரிகள் உபயம் பெறுகின்றனர். அவ்வாறு பெறும் உணவு, நல்ல தரத்துடன் இல்லாததால், பெற்றோர் எங்களிடம் சண்டை போடுகின்றனர். ஒவ்வொரு போட்டிக்கும், அரசு நிதி ஒதுக்கும் நிலையில், அதை அதிகாரிகளே சுருட்டுவதால், எங்களுக்கு தலைவலி அதிகரிக்கிறது. அதனால், கலைப் போட்டி களுக்காக, ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கப்படும் நிதி குறித்து, பள்ளிக் கல்வி துறை வெளிப்படையாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
நீங்க எல்லாம் அம்புட்டு காசையும் அடிச்சு என்னதான் செய்ய முடியும்....