காரைக்கால்: காரைக்கால் கோவில் நில மோசடி வழக்கில் சப் கலெக்டர் ஜான்சனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சுற்றுலா துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்கியதாக காரைக்கால் சப் கலெக்டர் ஜான்சன், முன்னாள் கலெக்டர் ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய அரசாணை சமூக வலைதளங்களில் பரவியது.இதுகுறித்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, இந்து முன்னணியினர் நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில், கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் காரைக்கால் கலெக்டர் மணிகண்டன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.இந்நிலையில், சப் கலெக்டர் ஜான்சன் தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக, கடந்த மாதம் காரைக்கால் போலீசில் புகார் அளித்தார்.இதுகுறித்து, சீனியர் எஸ்.பி., மனிஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த தகவலின் பேரில், இடைத்தரகர் சிவராமனை கைது செய்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது.கோவில் நிலத்தை தனி நபர்களுக்கு விற்பனை செய்ய முற்பட்டு, பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரிய வந்தது. அதன்பேரில், என்.ஆர்.காங்., பிரமுகர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து சிலரை கைது செய்தனர். தலைமறைவான ஆனந்த்தை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் ரேணுகாதேவியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், சப் கலெக்டர் ஜான்சன் தலைமையில், இதற்கான கூட்டு சதி நடந்தது தெரிய வந்தது. ரேணுகாதேவி அளித்த தகவலின்பேரில், சப் கலெக்டரின் மொபைல் எண்ணிற்கு வந்த அழைப்புகள் மற்றும் அவரது வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், பெரும் தொகை கைமாறியது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இருந்த சப் கலெக்டர் ஜான்சனை தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஏற்கனவே தங்களிடம் சிக்கிய பல முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில், சப் கலெக்டர் பிரபல மதுபான உரிமையாளருடன் கூட்டு சேர்ந்து முதலீடு செய்ததும், இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள ஆளும்கட்சி பிரமுகர் ஆனந்துடன், மேலும் இருவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இதனால், சப் கலெக்டர் ஜான்சன் இன்று கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.