மேலும் செய்திகள்
மழை நீர் செல்லும் தடத்தில் துாய்மை பணி
10-Oct-2025
பாகூர்: பாகூர் பகுதியில் புறவழிச்சாலையால், தடைபட்டுள்ள நீர் போக்கு பாதைகளை, உடனடியாக துார்வாரிட சப் கலெக்டர் குமரன் உத்தரவிட்டார். பாகூர் பகுதியில் 5,000 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக பருவ மழையால், பாகூர் பகுதியில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையே முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். புறவழிச்சாலையால், பல இடங்களில் வடிகால் வாய்க்கால்களும், இயற்கையான நீர் போக்கு பாதைகளும் தடைபட்டுள்ளன. இதனால், வயல்வெளியில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால், நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, வில்லியனுார் சப் கலெக்டர் குமரன் மற்றும் அதிகாரிகள் நேற்று பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்கள் மற்றும் புறவழிச்சாலையால் தடைப்பட்ட நீர்வழித்தடங்களை பார்வையிட்டனர். அவர்களிடம், புறவழிச்சாலையால் நீர் வழித்தடங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து விவசாயிகள் விளக்கினர். இதையடுத்து, நீர் போக்கு பாதையில் உள்ள தடைகளை உடனடியாக அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் மதிவாணன், தேசிய நெடுஞ்சாலை செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், நகாய் இன்ஜினியர் அன்பரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
10-Oct-2025