கைவினை கலைஞர்களுக்கு மானிய கடன் திட்டம் அறிவிப்பு
சென்னை:'கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன், 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்' என, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை தொழில்முனைவோராகவும் உயர்த்த, கலைஞர் கைவினை திட்டம் என்ற பெயரில் விரிவான திட்டம் துவக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல், 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் துவங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்யவும், கடன் உதவிகள் வழங்கப்படும். இது தவிர, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும்.இத்திட்டத்தில் அதிகபட்சமாக, 50,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரை, 25 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்குவதுடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இதில் பயன் பெற குறைந்தபட்ச வயது 35. இத்திட்டத்தின் கீழ், மர வேலை, சிற்பம், மலர், நகை செய்தல், தையல் உள்ளிட்ட, 25 வகை தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு, 10,000 கைவினைகலைஞர்கள் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன் பெற, www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் தலைமையில் உள்ள குழு சரிபார்த்து, வங்கிகளுக்கு கடன் வழங்க பரிந்துரைக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். மத்திய அரசு, சிற்பி, தச்சர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன்பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை, 2023 செப்டம்பரில் துவக்கியது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது, 18. பயிற்சி முடித்த பின், 15,000 ரூபாய் மதிப்புள்ள தொழில் கருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும். பின், 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இத்திட்டம், குலக்கல்வியை ஊக்குவிக்கப்பது போல இருப்பதாக தெரிவித்து, அதை தமிழக அரசு செயல்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை போல், தமிழக அரசு கைவினை கலைஞர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.