உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயினார் நாகேந்திரன் தேர்தல் வழக்கு; உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

நயினார் நாகேந்திரன் தேர்தல் வழக்கு; உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்துள்ள மனுவை, உரிய முறையில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர்ட் புரூஸ், 1 லட்சத்து 65,620 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவரது வெற்றியை எதிர்த்து, பா.ஜ., சார்பில் போட்டியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்து விபரங்களையும், வழக்கு விபரங்களையும் மறைத்துள்ளதாக மனுவில் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி இருந்தார்.அவரது மனுவில் இடம் பெற்றிருந்த சில அம்சங்களை நீக்கக்கோரி, ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புரூஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்தியநாராயணன், ''எங்கள் தரப்பு கோரிக்கையை முழுமையாக விசாரிக்கவில்லை. அதோடு, கோரிக்கை ஏற்கப்படாமல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.''எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கவும் கால அவகாசம் கொடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'சொத்து விபரம் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்பாக ராபர்ட் புரூஸ் தரப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை, உரிய முறையில் பரிசீலித்து விசாரணை நடத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை