உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முன்பதிவு பெட்டிகளில் மற்றவர்கள் பயணிப்பதை தடுக்க திடீர் சோதனை

முன்பதிவு பெட்டிகளில் மற்றவர்கள் பயணிப்பதை தடுக்க திடீர் சோதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளியை ஒட்டி, ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாதவர்கள் பயணிப்பதை தடுக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊருக்கு செல்ல துவங்கியுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் செல்வதால், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. பயணியர் காத்திருக்க வசதியாக, சென்னை எழும்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், தற்காலிக காத்திருப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் டிக்கெட் உறுதியாகாமல் இருந்து, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியரும், முன்பதிவு பெட்டிகளில் ஏறி விடுகின்றனர். முன்பதிவு பயணியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால், டிக்கெட் கிடைத்தும், நிம்மதியாக பயணம் செய்ய முடியாமல், முன்பதிவு பயணியர் அவதிப்படுகின்றனர். இதற்கிடையே, ரயில் நிலையங்கள், ரயில்களில், பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியை துவங்கியுள்ளனர். இதுகுறித்து, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வே பாதுகாப்பு படையில், 3,500 பேர் உள்ளனர். இதில், சென்னை கோட்டத்தில் மட்டுமே, 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில், கடந்த சில நாட்களாக பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால், கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புறநகரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படையினரில் 50 சதவீதம் பேர், முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்களில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயணியரை வரிசையில் அனுப்பி வைக்கிறோம். சென்னை - கோவை, பெங்களூரு; எழும்பூர் - திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் சோதனை நடத்துவர். ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். முன்பதிவு இல்லாத பெட்டிகளை ஆக்கிரமிக்கும் மற்ற பயணியரை கண்டறிந்து, அபராதம் விதிக்கப்படும். பயணியர், '139' என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில், 50 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளோம். ஒவ்வொரு குழுவிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசாரும் இருப்பர். இவர்கள், சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, மங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் விரைவு ரயில்களில் திடீரென ஏறி சோதனை நடத்துவர். முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம், 1,000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். பயணியர் சொல்வது என்ன? ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: விரைவு ரயில்கள் புறப்படும் இடத்தில் முன்பதிவு பெட்டிகளில், மற்ற பயணியர் ஆக்கிரமிப்பு செய்வதில்லை. இடையில் உள்ள ரயில் நிறுத்தங்களில், பயணியர் குழுவாக உள்ளே புகுந்து விடுகின்றனர். குறிப்பாக, திருப்பூர், சேலம், ஈரோடு தடத்தில், அதிகளவில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குவிந்து விடுகின்றனர். எனவே, இதுபோன்ற ரயில் நிலையங்களிலும், கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Gokul Krishnan
அக் 16, 2025 08:32

எர்ணாகுளம் பாட்னா விரைவு ரயிலில் சில தினங்கள் முன்பு பீகாரிகள் முன் பதிவு செய்த பெட்டிகளில் ஏறி அட்டூழியம் செய்து திருப்பூரில் ரயில் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது


Kasimani Baskaran
அக் 16, 2025 03:44

திருவிழாக்காலங்களில் அதிக எண்ணிக்கையில் இரயில்களை இயக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை