உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் விடிய விடிய நடந்த விசாரணைக்கு பின் விடுவிப்பு

சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் விடிய விடிய நடந்த விசாரணைக்கு பின் விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சிறுவன் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, ஏ.டி.ஜி.பி., ஜெயராம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவருக்கு, புதிய உடை, விரும்பிய உணவு, பழச்சாறு வாங்கி கொடுத்து போலீசார் கவனித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் காளம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், 23; தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, ஆகியோர், கடந்த ஏப்ரலில் காதல் திருமணம் செய்தனர்.இந்த தம்பதியை பிரிக்க, மதுரையைச் சேர்ந்த, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட பெண் போலீஸ் மகேஸ்வரி, 48; ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி., ஜெயராம், 59; புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் முயற்சி செய்துள்ளனர்.அவர்களின் ஆலோசனைப்படி, கடந்த 7ம் தேதி இரவு 12:30 மணியவில் வீட்டு மாடியில் துாங்கிய தனுஷ் தம்பியான, 17 வயது சிறுவனை கடத்தியுள்ளனர். அதிகாலை 3:00 மணியளவில், ஏ.டி.ஜி.பி., ஜெயராமுக்கு அரசு வழங்கியுள்ள, 'இன்னோவா' காரில் சிறுவனை அழைத்துச் சென்று, அவரின் வீட்டருகே விட்டுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட போலீசார், விஜயஸ்ரீ தந்தை வனராஜ், மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். ஏ.டி.ஜி.பி., ஜெயராமனிடம் விசாரணை நடத்தவும், ஜெகன்மூர்த்தியை கைது செய்யவும் தேடி வந்தனர். இந்நிலையில், ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 'ஜெயராமை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். விசாரணை அதிகாரி முன் ஜெகன்மூர்த்தி தனியாக ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே, சீருடையில் இருந்த ஜெயராமை, திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழரசி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.அவரை திருவாலாங்காடு காவல் நிலையம் அழைத்துச் சென்று, நேற்று அதிகாலை 2:30 மணி வரை விசாரித்தனர்.அதன்பின், அதிகாலை 3:00 மணியளவில், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர் செய்து, சிறையில் அடைக்க இருப்பதாக தகவல் வெளியானது.இதனால், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகம் முழுதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெளிநபர்கள் தொடர்ச்சி 7ம் பக்கம்அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், ஜெயராம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தஜெயராமுக்கு பணிவிடை செய்ய, எஸ்.பி., பிரிவு ஏட்டுகள் என அழைக்கப்படும், மூன்று போலீசார் நியமிக்கப்பட்டனர். ஜெயராம் கேட்ட பொருட்களை எல்லாம், அவர்கள் வாங்கிக் கொடுத்தனர்.ஜெயராமுக்கு புதிய உடைகள், துண்டு, குளியல் சோப், முக பவுடர் உள்ளிட்ட பொருட்களும், விரும்பிய உணவுகளையும் வாங்கி கொடுத்து கவனித்துக் கொண்டனர். நேற்று மாலை 3:00 மணியளவில், ஜெயராம் மீண்டும் திருவாலாங்காடு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கு விசாரணைக்கு ஆஜரான எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தி முன் அமர வைக்கப்பட்டார். இருவரிடமும் டி.எஸ்.பி., தமிழரசி விசாரித்து வாக்குமூலம் பெற்றார். ஜெயராமிடம் மாலை 6:00 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. அதன்பின், காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டு, சொந்த வாகனத்தில் ஜெயராம் புறப்பட்டுச் சென்றார்.மீண்டும் விசாரணைவிசாரணைக்கு பின், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராம், ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் கூறுகையில், “யாரையும் விடுவிக்கவில்லை; தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம்,” என்றார்.- டில்லி சிறப்பு நிருபர் -

சுப்ரீம் கோர்ட்டில் இன்றுஜெயராம் மனு விசாரணை

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவே, மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என, ஜெயராம்ன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.அதை ஏற்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் அமர்வு, மனுவை உடனடியாக விசாரிக்க சம்மதித்தது. இதையடுத்து மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

ஜெகன்மூர்த்தியிடம் 10 மணி நேரம் விசாரணை

சிறுவன் கடத்தலில் உள்ள தொடர்புகள் குறித்து, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தியிடம், 10 மணி நேரம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஜெகன்மூர்த்தி, 59, திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காடு காவல் நிலையத்தில் நேற்று காலை 9:10 மணியளவில் ஆஜரானார். அவரிடம், டி.எஸ்.பி., தமிழரசி, 10 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். மாலை 6:15க்கு அவர் விடுவிக்கப்பட்டார்.போலீசார் கூறியதாவது: சிறுவன் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள, 'டிஸ்மிஸ் கான்ஸ்டபிள்' மகேஸ்வரி, காதல் திருமணம் செய்த பெண்ணின் தந்தை வனராஜ் ஆகியோர், சென்னை பூந்தமல்லியில் உள்ள ேஹாட்டலில், எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தியை சந்தித்து உள்ளனர். பின், இருவரும் ஏ.டி.ஜி.பி., ஜெயராமை சந்தித்துள்ளனர்.சிறுவன் கடத்தல் தொடர்பாக நால்வரும் ஆலோசனை செய்துள்ளனர். அதன்பின்னரே சிறுவன் கடத்தப்பட்டு உள்ளான். இந்த கடத்தல் நடப்பதற்கு முன்னும் பின்னும், ஜெயராமும் - ஜெகன்மூர்த்தியும் பேசியுள்ளனர். மகேஸ்வரி, வனராஜ், ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோருக்கு இடையோன மொபைல் போன் பேச்சுகள், பேசிய நேரம் என, அனைத்து விபரங்களையும் சேகரித்து உள்ளோம். அதற்காக, சி.டி.ஆர்., எனப்படும், 'கால் டீடைல்ஸ் ரெக்கார்டு' அடிப்படையில் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.செல்வந்தரான வனராஜ், எப்படியாவது தன் மகளை பிரித்து விடுங்கள் என, மகேஸ்வரி வாயிலாக, ஜெகன்மூர்த்தி, ஜெயராம் ஆகியோரிடம் கெஞ்சியுள்ளார். இதற்காக, கோடிக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். அதுபற்றி, மகேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக, மகேஸ்வரி, ஜெகன்மூர்த்தி, ஜெயராம் ஆகியோரிடம் பேசிய முக்கிய அரசியல் புள்ளிகள் குறித்த விபரமும் சேகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் பெயரைச் சொல்லி கேட்டபோது, அதுபற்றிய தகவல்களை தெரிவிக்க ஜெகன்மூர்த்தி மறுத்து விட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 18, 2025 03:59

நீதிபதி கைது செய்யச்சொன்னாரே தவிர ஜெயராம் எந்த செக்சனில் தவறு செய்தார் என்று சொல்லவில்லை. ஆகவே விசாரணையில் அவர் குற்றவாளி இல்லை என்பர் நிச்சயித்துக்கொண்டு விடுவித்து விட்டோம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை