உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்துப் பேசாத தமிழக அரசு 2 வாரங்களாக நீடிக்கும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்துப் பேசாத தமிழக அரசு 2 வாரங்களாக நீடிக்கும் போராட்டம்

மதுரை: 'தமிழகத்தில் 22 இடங்களில் 13 நாட்களாக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை அரசுத்தரப்பில் அழைத்துப் பேசவில்லை' என, மதுரையில் சி.ஐ.டி.யு., மாநில சம்மேளன துணைத்தலைவர் பிச்சை வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பணிக்காலத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி தன்னிச்சையாக செலவழித்து விட்டனர். இதனால் 25 மாதங்களாக ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. காத்திருப்பு போராட்டம் அறிவித்தபின் ஆக., 18ல், ஜூலை 2023 முதல் ஏப்., 2024 வரை ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 15 மாதங்களுக்கு வழங்கவில்லை. 2018ல் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களை சீரமைக்க அன்றைய எதிர்க்கட்சியான தி.மு.க., அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் உள்ள 27 பரிந்துரைகளில் ஒன்றை கூட ஆட்சிக்கு வந்த தி.மு.க., நிறைவேற்றவில்லை. பிற அரசு துறைகளில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற 30 நாட்களில் பணப்பலன் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் தாமதம் செய்கின்றனர். ஜூலை 3ல் காத்திருப்பு போராட்டம் குறித்து அரசுக்கு தெரிவித்தோம். அதன்பின் 13 நாட்களாக போராட்டம் நடந்தும் இதுவரை யாரும் அழைத்துப் பேசவில்லை. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு வாரிசு வேலை வழங்கவில்லை. மற்ற பணியாளர்களை விட போக்குவரத்துக்கழக பணியாளர்களே அதிக பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே வாரிசு வேலையில் 5 சதவீதம் என்பதை நீக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !