தற்கொலைகளின் தலைநகரம் தமிழகம் கவர்னர் ரவி அதிர்ச்சி தகவல்
பெ.நா.பாளையம்: ''தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டிலேயே தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் உள்ளது,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார். கோவை மாவட்டம் துடியலுார் அருகே கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், 'சிந்து சரஸ்வதி நாகரிகம், சிந்து நதி முதல் தாமிரபரணி வரை நாகரிகத்தின் நோக்கும், போக்கும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில், கவர்னர் ரவி பேசியதாவது: இந்திய நாகரிகம் மிகவும் பழமையானது. இங்கிலாந்தில் உள்ள எடின்பரோ, கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைகள், கணிதம், மருத்துவம், வானியல் உள்ளிட்ட தொன்மையான இந்திய அறிவு மரபை கண்டறிந்து, மொழி பெயர்த்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டின. மொழி, மண்டலம் உள்ளிட்டவைகளில் நாம் வேறுபட்டாலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நம் நாட்டின் தத்துவம். சரஸ்வதி நதி குறித்து ரிக் வேதம் குறிப்பிடுகிறது. சரஸ்வதி நதி குறித்த செய்திகள் வெறும் புராணமல்ல; அறிவியல் ரீதியாக சரஸ்வதி நதி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் சரஸ்வதி நதி குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று தான் என்பது நம் வேதங்களின் அடிப்படை. ஆனால், இன்று மனிதர்கள் மன அழுத்தத்தாலும், பல்வேறு முரண்பாடுகளாலும் பாதிப்புகளை சந்திக்கின்றனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவணத்தில் தகவல் உள்ளது. ஆண்டுதோறும், 20,000 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.