டாஸ்மாக் மதுக்கடைகளை முன்கூட்டியே மூட பரிசீலனை
சென்னை: மழைக்காலம் முடியும் வரை, டாஸ்மாக் மதுக் கடைகளை, இரவு 10:00 மணிக்கு பதில், ஒரு மணி நேரம் முன்னதாக மூட, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. தினமும் மதியம், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, கடைகள் செயல்படுகின்றன. மாலை, 6:00 மணி முதல் கடைகள் மூடப்படும் வரை, 'குடி'மகன்களின் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது, வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்கிறது. மது குடித்து சாலையில் விழும், 'குடி'மகன்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. மேலும், இரவில் மதுக் கடைகளை மூடி விட்டு, வீடு செல்ல ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இரவு கடை மூடும் நேரத்தை குறைக்க, அரசு தரப்பில் ஆலோசனை நடந்து வருகிறது. இது குறித்து, டாஸ்மாக் மேலாளர் ஒருவர் கூறியதாவது: மதுக் கடைகளை சூழ்நிலைக்கு ஏற்றபடி மூட உத்தரவிட, கலெக்டர்களுக்கு அதிகாரம் உள்ளது. மழை சீசனில் மதுக் கடைகளை மூடக் கோரி, பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் வந்துள்ளன. எனவே, அடுத்த மாதம், 30ம் தேதி வரை மாநிலம் முழுதும், மதுக் கடைகள் நேரத்தை, இரவில் ஒரு மணி நேரம் குறைக்கலாமா அல்லது மழை பெய்யும் மாவட்டங்களில் மட்டும், அதை செயல்படுத்தலாமா என, அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.