சூரியன் இருக்கும் திசையை நோக்கி தானாக சோலார் பேனலை திருப்பும் டெக்னாலஜி: குளோபல் சோலார் எக்ஸ்போ கண்காட்சியில் பிரமிப்பு
கோவை: 'குளோபல் சோலார் எக்ஸ்போ - 2025' கண்காட்சி, கோவை 'கொடிசியா' வளாகத்தில் இரு நாட்கள் நடந்தது. சோலார் பேனல்கள், சோலார் மின்னுற்பத்தி சார்ந்த இன்வெர்ட்டர்கள், தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்சாரத்தை கையாளும் திறன் கொண்ட பேனல்கள் என, வீட்டு உபயோக மற்றும் வர்த்தக உபயோகத்துக்கான சோலார் பொருட்கள் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனத்தினர் கூறுகையில், '2030ல் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 500 கிகாவாட் ஆக இருக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சோலார் உற்பத்தி பெரும்பங்கு வகிக்கும். வீடுதோறும் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு சூர்யகர் திட்டத்தை அறிவித்து மானியம் வழங்கி வருகிறது. தொழில்துறையினரும் மேற்கூரை சோலார் திட்டங்களுக்கு மாறி வருகின்றனர். இதன் வாயிலாக, 2070ல் நெட் ஜீரோ இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. பசுமை எரிசக்தியே இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான உந்து சக்தியாக இருக்கும்' என்றனர். மின் வாகன சார்ஜர் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான இயந்திரம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த சார்ஜர்கள், 60 கிலோ வாட் வரை திறன் கொண்டவை. வர்த்தக ரீதியில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ன்ட்களை அமைக்க விரும்புவோர், இதனை வாங்கி நிறுவலாம். பெரிய அளவிலான தொழில்நுட்ப உதவி ஏதுமின்றி, மின் இணைப்பு மட்டும் வழங்கி, வர்த்தக ரீதியில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில், இந்த சார்ஜ் இயந்திரம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சூரியகாந்தி சோலார் வர்த்தக ரீதியில் பெரிய அளவிலான சோலார் பார்க்குகள் அமைக்கும்போது, சூரிய ஒளியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள, புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியுள்ளன. அவ்வகையில், சூரியன் இருக்கும் திசை நோக்கி, தானாக சோலார் பேனல்களைத் திருப்பிக் கொள்ளும், 'சிங்கிள் ஆக்சிஸ் டிராக்கர் மாடல்' எனப்படும், சோலார் டிராக்கிங் தொழில்நுட்பமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இவை தவிர, குறைந்த ஒளியிலும் மின்னுற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், உயர் மின்னழுத்தத்தால் ஏற்படும் உற்பத்தி இழப்பு (பி.ஐ.டி.,) பிரச்னைக்கு எதிரான தொழில்நுட்பம், பூலிங் சப்ஸ்டேஷன்கள், மீடியம் வோல்டேஜ் பேனல்கள் என, சோலார் சார்ந்து ஏராளமான ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன.