உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் தலைவன்கோட்டை முன் உதாரணம்: அனைவரும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் தலைவன்கோட்டை முன் உதாரணம்: அனைவரும் பின்பற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சட்டத்தின் நோக்கங்களை செயல்படுத்துவதில் குறிப்பாக தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டையை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.தலைவன்கோட்டையில் சிலரை அவதுாறாக பேசி, மிரட்டல் விடுத்தததாக திருமலைச்சாமி என்பவர் மீது புளியங்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். அவருக்கு கீழமை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தது.இதற்கு எதிராக திருமலைச்சாமி உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். ஏற்கனவே விசாரித்த நீதிபதி ஆர்.என். மஞ்சுளா,'மனுதாரருக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது,' என உத்தரவிட்டார். புகார்தாரர் முனியம்மாள்,'மற்ற சமூக மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் பெறுவது கடினம்,' என்றார்.அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தண்ணீர் பொதுவான வளம். அதை பகிர்ந்து கொள்வதில்கூட, இன்னும் பிற சமூகத்தினரால் சிலர் ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர். அறிவியல் யுகத்தில் வியப்பாக உள்ளது. தலைவன்கோட்டை தெருக்களில் போதிய குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா மீண்டும் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கதிர்வேலு, அரசு தரப்பில் வழக்கறிஞர் ஒளிராஜா ஆஜராகினர்.அரசு தரப்பில், 'குறிப்பிட்ட பகுதியில் போதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது எந்த பாகுபாடும் இல்லை,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தனிமனித சுதந்திரம் பாதிப்பு, அடிப்படை பொது தேவைகளை பகிர்ந்து கொள்ளும்போது ஜாதிய ரீதியான பிரச்னை எழுந்தால் நீதிமன்ற உத்தரவிற்காக அதிகாரிகள் காத்திருக்க தேவையில்லை. அனைத்து சமூகத்தினரும் பாகுபாடின்றி பொதுவான தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.அடிப்படை தேவைகளை வழங்குவதில் பாகுபாடு காட்டும்போது தான் ஜாதிய ரீதியான பிரச்னைகள் எழுகிறது.சில இடங்களில் குடிநீர் குழாயில் வார்த்தைகளில் துவங்கும் பிரச்னை விரும்பத்தகாத செயல்களில் போய் முடிகிறது.ஒருவரின் அடிப்படை உரிமைகள் எந்த நிலையிலும் மீறப்படவில்லை என்பதை மாநிலத்தின் அனைத்துத்துறை அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.தலைவன்கோட்டை பகுதி மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தியானதும் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.தமிழகம் முழுவதும் அடிப்படை தேவைகள், பொது வளங்கள் ஜாதிய பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகங்கள் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனரக இயக்குனர், பேரூராட்சிகளின் இயக்குனரக இயக்குனர் மற்றும் அனைத்து மாவட்டங்களின் கலெக்டர்கள் டி.ஜி.பி.,யின் ஒருங்கிணைப்புடன், தலைமைச் செயலரின் மேற்பார்வையின் கீழ், சட்டத்தின் நோக்கங்களை செயல்படுத்துவதில், குறிப்பாக தண்ணீரை பகிர்ந்து கொள்வதில், தலைவன்கோட்டையை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும். ஆக.21 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Balamurugan
ஆக 06, 2025 13:25

நீதிபதி அவர்களே நீங்கள் நேரில் சென்று அரசு தரப்பில் சொன்னதை போல குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தீர்களா? மக்கள் பிரச்னை தீர்ந்ததா என்று முழு ஆய்வு செய்தீர்களா? சும்மா குளிர் அறையில் உட்கார்ந்து கொண்டு பேப்பரில் எழுதி கொடுக்கும் எழுத்துக்களில் முடிவு செய்யக்கூடாது.


ஆரூர் ரங்
ஆக 06, 2025 11:09

பல பட்டியலினத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் வசதியே கிடையாது. ஊர் மேல்நிலை நீர்த்தொட்டியை மற்ற OBC வகுப்பினர் வசிக்கும் பகுதியில் வைத்தால் பட்டியலின பகுதிக்கு நீர் விடக்கூடாது என தகராறு. பட்டியலின சத்துணவு ஊழியர்களாக நியமிக்கப்பட்டாலும் பிரச்சினை செய்கிறார்கள். பெரியார் எதனை ஒழித்தார் ?


ட.குருநாதன், மதுரை
ஆக 06, 2025 11:04

nice example everyone has to follow


Ganapathy Subramanian
ஆக 06, 2025 10:17

ஜட்ஜம்மா, அப்படியே விடியா ஆட்சியின் அதிகாரிகள் சொல்லுவதை நம்பிடாதீங்க. யாரையாவது அனுப்பி சோதிக்க சொல்லுங்க. இவங்கல்லாம் பொய் சொல்லி அதனால் ஜாமீன் கோர்ட் கொடுத்துட்டாங்கன்னு உயர்நீதிமன்றத்துல இன்னொரு ஜட்ஜம்மாவிற்கு அறிவுரை சொல்லியிருக்காங்களே, மறந்துட்டீங்களா?


சமீபத்திய செய்தி