உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வினியோக திட்ட மானியம் மத்திய அரசிடம் கேட்குது வாரியம்

மின் வினியோக திட்ட மானியம் மத்திய அரசிடம் கேட்குது வாரியம்

சென்னை: மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்ட பணிகளுக்கு, 1,000 கோடி ரூபாயை மானியமாக மத்திய அரசிடம், மின் வாரியம் கேட்டுள்ளது. நாடு முழுதும் மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் இழப்பை பூஜ்யமாக குறைக்க, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிதாக, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது, கிராமங்களில் விவசாயத்திற்கு தனி வழித்தடத்தில் மின் வினியோகம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. திட்ட பணிகளை, 8,932 கோடி ரூபாயில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த, 2023 - 24ல் துவக்கப்பட்ட இப்பணிகளை, வரும், 2028 மார்ச்சுக்குள் முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் பணிகளை முடித்து விட்டால், ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில், 60 சதவீதம் அதாவது, 5,359 கோடி ரூபாய் மானியமாகி விடும்; அதை திரும்ப செலுத்த தேவையில்லை. இல்லையெனில், வட்டியுடன் மொத்த நிதியையும் செலுத்த வேண்டும். அதன்படி, மறுசீரமைக்கப் பட்ட பணிகளை முடிப்பதற்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியாக நிதி விடுவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 550 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மானியத்தில், 1,000 கோடி ரூபாயை வழங்குமாறு, மத்திய அரசிடம், மின் வாரியம் கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை