கொள்ளையடிக்கவே அறநிலையத்துறை;கோவிலை விட்டு வெளியேறணும் ஹிந்து முன்னணி பொதுச்செயலர் வேண்டுகோள்
தேனி:கோவில்களை விட்டு ஹிந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்; கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.தேனியில், அவர் அளித்த பேட்டி:திருச்செந்துார், தஞ்சை பெரிய கோவில்களில் பக்தர்கள் மூச்சுத்திணறி இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உடல்நிலை சரியில்லாததால் பக்தர்கள் உயிரிழந்தனர் என கூறுவதை ஏற்க முடியாது. அரசின் நோக்கம், அறநிலையத்துறை வாயிலாக கொள்ளையடிப்பது மட்டுமே என்ற சூழல் மாற்றப்பட வேண்டும். மதச்சார்பற்ற அரசு என கூறி, 38 ஆயிரம் கோவில்களை மட்டும் நிர்வகிக்கின்றனர். அதிக வருவாய் வரும் கோவில்களை கைப்பற்றி நிர்வாகம் செய்கின்றனர். தமிழகத்தின் பல கிராமங்களிலும் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றால் கூட அறநிலையத்துறைக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கொடுக்கின்றனர். அதனால், இனியும் கோவில் நிர்வாகத்தில் அறநிலையத்துறை இருக்கக் கூடாது. உடனே, கோவில்களை விட்டு வெளியேற வேண்டும். அல்லது சர்ச், மசூதிகளையும் நிர்வாகத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கேரளாவில் கட்டண தரிசனம் கிடையாது. அதேபோல, தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவுகள் பிறப்பிக்கின்றன. ஆனால், அதை தமிழக அரசு மதிப்பதில்லை. தமிழக பள்ளிகளில், ஹிந்தி வேண்டாம் என்றால், மூன்றாவது மொழியாக அண்டை மாநில மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.