ஒருவருரையொருவர் பாராட்டிய தங்கம் தென்னரசு, தங்கமணி
சென்னை:சட்டசபையில் நேற்று பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியும், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். சட்டசபையில் நேற்று தங்கமணி பேசும்போது, ''கடந்த நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில் மட்டும், 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கப்பட்டுள்ளது,'' என குற்றம் சாட்டினார். அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ''தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, தங்கமணி சிறப்பாக செயல்பட்டவர். அ.தி.மு.க., ஆட்சியை விட, தி.மு.க., ஆட்சியில் கடன் விகிதம் குறைவாகவே உள்ளது,'' என்றார். தொடர்ந்து பேசிய தங்கமணி, ''நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொல்லக்கூடியவர். அ.தி.மு.க., ஆட்சியில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, தங்கம் தென்னரசு பேசினால், தொடர்ந்து அனுமதியுங்கள்; நல்ல கருத்துகளை பேசுவார் என ஜெயலலிதாவே குறிப்பிட்டுள்ளார்,'' என்றார். இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டதை, சபையில் இருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.