கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அணைக்கரையைச் சேர்ந்தவர் அபிஷா, 23, பட்டதாரி. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின், 27. இருவரும் காதலித்து 2021-ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு, 82 சவரன் நகை, 9 லட்சம் ரூபாய், கார் உள்ளிட்ட சீர்வரிசைகள் தரப்பட்டன. ஒன்றரை வயதில் இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிப்ரவரி முதல் பிரிந்து வாழ்கின்றனர். அடிக்கடி அபிஷா வீட்டுக்கு சென்று பெர்லின் தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, அபிஷா அப்பகுதியில் உள்ள கல்லுாரியில் பி.எட்., படிக்க ஸ்கூட்டரில் சென்று வந்தார். நேற்று முன்தினம் அருவிக்கரை பாலம் பகுதியில் அபிஷாவின் ஸ்கூட்டரை வழிமறித்து காரை நிறுத்திய பெர்லின், ஸ்கூட்டர் சாவியை பறித்து காரில் புறப்பட்டார்.சாவியை வாங்குவதற்காக அபிஷா முயன்ற போது, அவரது கையைப் பிடித்து இழுத்தபடி காரை ஓட்டினார். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் காரை துரத்தியபோது, அபிஷாவின் கையை விட்டு, காரை வேகமாக ஓட்டிச் சென்றார். கீழே விழுந்த அபிஷா படுகாயம் அடைந்து, குலசேகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குலசேகரம் போலீசார் பெர்லினை நேற்று கைது செய்தனர்.---சித்ரவதை செய்த கணவரை சுவரில் மோதி கொன்ற பெண்
சென்னை நுங்கம்பாக்கம், வைகுண்டபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,44; சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். இவரது மனைவி கனகவள்ளி, 34, வீட்டு வேலை செய்து வருகிறார். தம்பதிக்கு திவாகர், 15, ராகவ், 13, என, இரு மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கமுள்ள பாலகிருஷ்ணன், தினமும் போதையில் வந்து, மனைவி கனகவள்ளியிடம் தகராறில் ஈடுபட்டு, சித்ரவதை செய்துள்ளார்.அதேபோல, நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வந்த பாலகிருஷ்ணன், கனகவள்ளியை அடித்துள்ளார். இதை தாங்கிக் கொள்ள முடியாத கனகவள்ளி, ஆத்திரத்தில் பாலகிருஷ்ணனின் தலையைப் பிடித்து, சுவரில் பலமாக மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகவள்ளியை கைது செய்து விசாரித்தனர். கொலை செய்யும் நோக்கில் இதை செய்யவில்லை. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் சுவரில் தள்ளியதால் கணவர் உயிரிழந்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.---அவமானப்படுத்தியதால் பள்ளி மாணவன் தற்கொலை
திருநெல்வேலி சாந்திநகர் நாகராஜன். கட்டுமான நிறுவன சூப்பர்வைசர். மனைவி மாரியம்மாள். இவர்களது மூத்த மகன் நரேன் 14, திருநெல்வேலி மாவட்ட கோர்ட் எதிரே உள்ள பெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார். இளைய மகன் அதே பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். மழை வெள்ளம் காரணமாக வேலை இல்லாததால் நாகராஜனுக்கு வருமானம் இல்லை. நரேனுக்குரிய பள்ளி கட்டணம் செலுத்த தாமதம் ஆனது.ஜன., 2 பள்ளியில் தேர்வு அறையில் இருந்தபோது நரேனை எழுப்பி தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் பள்ளிக்கு வர வேண்டாம் என சக மாணவர்கள் முன்பாக அவமானப்படுத்தியுள்ளனர். மனமுடைந்த நரேன் பள்ளிக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் பள்ளி ஆசிரியை போனில் அழைத்து கட்டணம் கொண்டு வருமாறு கூறியுள்ளார். வெள்ள நிவாரணத்துக்கு அரசு கொடுத்த பணம் ரூ.5000 உள்ளது. அதை கொண்டு வருகிறேன் என கூறியுள்ளார்.அதற்கு முழு பணம் ரூ.11 ஆயிரம் கொண்டு வந்தால் தான் பள்ளிக்கு வர வேண்டும். இல்லையென்றால் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். மனமுடைந்த நரேன் வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவன் சாவுக்கு காரணமான ஆசிரியை, தாளாளர், நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நரேனின் உறவினர்கள் நேற்று பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், கல்வித்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.---லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
தர்மபுரி மாவட்டம், மிட்டாநுாலஹள்ளி அடுத்த பூசாலிக்கொட்டாயை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 35; விவசாயி. இவரது தாத்தாவுக்கு சொந்தமான, 18 சென்ட் நில சிட்டாவில், தவறுதலாக கமலேஷ் என்பவரின் பெயர் சேர்க்கப்பட்டதை அறிந்து, அந்த பெயரை நீக்க, நுாலஹள்ளி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.'பெயரை நீக்க, 20,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்' என, நுாலஹள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசன் கேட்டுள்ளார். தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் கணேசமூர்த்தி புகார் செய்தார். வெங்கடேசனுக்கு, லஞ்சம் தர கணேசமூர்த்தி நேற்று சென்றார். வெங்கடேசன் கூறியதால், அங்கிருந்த தனியார் அலுவலர் அமுதா, 20,000 ரூபாயை பெற்றார். மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், அமுதா, 24, வெங்கடேசன், 35, ஆகியோரை கையும், களவுமாக கைது செய்தனர்.---பயணியை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
குமரி மாவட்டம், குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரு நாட்களுக்கு முன் அரசு பஸ்சில், ஆற்றுாரில் ஒரு இளைஞர் ஏறினார். அவரிடம் டிக்கெட் எடுக்க கூறிய போது, 'பெண்களுக்கு மட்டும் இலவசம்... எங்களுக்கு கட்டணமா?' என, கேட்டார். இதனால் கண்டக்டர் காந்திக்கும், அந்த இளைஞருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் பத்மகுமார், கண்டக்டருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கினார்.இதற்கிடையே, டிரைவர், கண்டக்டர் சேர்ந்து இளைஞரை தாக்கும் வீடியோ, சமூகவலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. இது பற்றி போலீசார் விசாரித்த போது, அந்த நபர் உண்ணாமலை கடை அருகே, முடியாம்பாறை பகுதியை சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து, டிரைவர் மற்றும் கண்டக்டரை சஸ்பெண்ட் செய்து, அரசு போக்குவரத்து கழக நாகர்கோவில் கிளை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.---நிலத்தை அபகரித்ததால் தீக்குளித்த விவசாயி சாவு
திருவண்ணாமலை மாவட்டம், நவம்பட்டு, இருதயபுரத்தை சேர்ந்தவர் பழனி, 68; விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியை சேர்ந்த ராயப்பன் முன்னிலையில், தச்சம்பட்டை சேர்ந்த ரவி, 50, அவரது மனைவி சென்னம்மாள், 48, ஆகியோரிடம் அடமானம் வைத்து, ௨௦௧௭ல் பணம் பெற்று பத்திரப்பதிவும் செய்து கொடுத்தார்.சில நாட்களுக்கு முன், பணத்தை கொடுத்து, நிலத்தை திருப்பி தருமாறு ரவி வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது, நிலத்தை வேறொருவருக்கு ரவி விற்றது தெரிந்தது. இந்த மோசடிக்கு உடந்தையாக ராயப்பன் செயல்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் ராயப்பன் வீட்டுக்கு சென்ற பழனி நியாயம் கேட்டுள்ளார். அப்போது அவர் அவதுாறாக பேசியதால் மனமுடைந்ததில் பழனி, ராயப்பன் வீட்டு எதிரிலேயே தீக்குளித்தார்.படுகாயமடைந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு இறந்தார். தச்சம்பட்டு போலீசார், ராயப்பனை கைது செய்தனர். தலைமறைவான ரவி, அவரது மனைவி சென்னம்மாளை தேடி வருகின்றனர். இவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், மோசடி செய்து பெற்ற நிலத்தை திரும்ப பெற்று தர வலியுறுத்தியும், சடலத்துடன் திருவண்ணாமலை - திருக்கோவிலுார் சாலையில் நேற்று இரவு, 7:00 மணி முதல் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.---ரவுடிகள் 5 பேரை சுட்டு பிடித்த நெல்லை போலீசார்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன், 34. இவர் மீது பல கொலை, கொள்ளை, கஞ்சா வழக்குகள் உள்ளன. இவர், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். களக்காடு அருகே மேலகாடுவெட்டியில் இசக்கிபாண்டி என்பவர் நவ., 22ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சிவசுப்பிரமணியன் தேடப்பட்டார்.இந்நிலையில், அவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பதுங்கி இருப்பதாக திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசனின் தனிப்படைக்கு தகவல் தெரிந்தது. தனிப்படை எஸ்.ஐ., ஆன்டோ பிரதீப் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் பெருந்துறை அருகே குள்ளம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்த திருநெல்வேலி ரவுடி கும்பலை சுற்றி வளைத்தனர்.அவர்கள் கைகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அந்த கும்பல் போலீசாரை கண்டதும் அரிவாளால் வெட்ட முயற்சித்தனர். கும்பல் மீது எஸ்.ஜ., ஆன்டோ பிரதீப், துப்பாக்கி சூடு நடத்தினார். எனினும், அவர்கள் மீது குண்டு படாமல் சுவற்றில் பட்டதால் உயிர் தப்பி ஓடினர்.இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. பின், சிவசுப்பிரமணியன், அவரது கூட்டாளிகளான முத்து மணிகண்டன், சூர்யா, வசந்தகுமார், இசக்கி பாண்டி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோட முயன்ற சிவசுப்பிரமணியனுக்கும், முத்து மணிகண்டனுக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களிடம் களக்காடு ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.---50 சவரன் நகை, ரூ.9 லட்சம் மிளகாய் பொடி துாவி வழிப்பறி
வேலுார் மாவட்டம் அக்ராவரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 45, குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார நகை கடைகளில், தங்க நகை கொள்முதல் செய்து, கடைகளுக்கு எடுத்து சென்று வினியோகித்து, தொகையை வசூல் செய்யும் ஏஜன்டாகவும் இருக்கிறார்.தன் நண்பரான, அன்பரசன், 40, என்பவருடன் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் நோக்கி ஒரே பைக்கில் புறப்பட்டனர். பின் தொடர்ந்து பைக்குகளில் வந்த நான்கு பேர், ரங்கநாதன் பைக்கை வழிமறித்து, மிளகாய் பொடியை துாவினர். 50 சவரன் நகை, 9 லட்சம் ரூபாயை பறித்து மின்னல் வேகத்தில் தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.---பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் போட்டவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாண்டான்விடுதி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகரான கணேசமூர்த்தி, 38, என்பவர், கடந்த டிச., 27ம் தேதி விளையாட்டாக, பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டரை தயார் செய்து, அவரது நண்பர்கள் ஆறு பேர் மட்டுமே உள்ள 'வாட்ஸாப்' தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை அவர்களில் யாரோ ஒருவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விட்டார். மக்களை பீதிக்குள்ளாக்கிய இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து பீர் குடிக்கும் போட்டிக்கு போஸ்டர் வெளியிட்ட கணேசமூர்த்தி மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து, நேற்று, கணேசமூர்த்தியை கைது செய்தனர்.---மனைவியை கொன்றவர் விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் இன்னாசிமுத்து 56. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி மருதம்மாள் 54. ஜன.3 இரவில் இருவருக்கும் குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இரவில் மனைவி மருதம்மாளை வெட்டிக் கொலை செய்துவிட்டு இன்னாசிமுத்துவும் விஷம் அருந்தியிருந்தார். மறுநாள் காலையில் மருதம்மாளின் தம்பி மருது அவர்களின் வீட்டுக்கு சென்றார்.கதவு திறக்கப்படாததால் உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மருதம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அங்கிருந்த இன்னாசிமுத்து அரிவாளால் மருதுவை வெட்டி விட்டு தப்பி ஓடினார். மருது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் இன்னாசிமுத்துவை கைது செய்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார்.---பிரபல தாதா சுட்டுக்கொலை
மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் சரத் மோஹல், 60, மற்றும் அவரது கூட்டாளிகள் ஈடுபட்டு வந்தனர். இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முஹமது கத்தீல் சித்திக் என்பவரை, சரத் மோஹல் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சரத் மோஹல், தன்னிடம் உள்ள நிலம் மற்றும் பணத்தை தன் கூட்டாளிகளுடன் நேற்று பங்கீடும்போது, அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, சரத் மோஹலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. துப்பாக்கிச் சூட்டில் சரத் மோஹல் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.---காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிகாம் கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், அந்த கிராமத்தை சுற்றி வளைத்து நேற்று அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான இடத்தை பாதுகாப்பு படையினர் சூழ்ந்ததால், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி திடீரென துப்பாக்கியால் அவர்கள் மீது சுட்டார். நம் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டார். என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஏ.கே., ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.---ஹிந்து கோயில் மீது தாக்குதல்
அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின் அலமேடா நகரின் ஹேவார்டு பகுதியில், விஜய் ஷெராவல்லி கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் இரவு கோவிலின் முகப்பில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், கோவில் சுவரில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வாசகங்களையும் எழுதி வைத்துள்ளனர்.