| ADDED : பிப் 23, 2024 02:52 AM
போடி: தேனி மாவட்டம் போடி அருகே போதையில் அடித்து துன்புறுத்திய கணவரை கல்லால் குத்தி கொலை செய்த மனைவி செலின்மேரி 52, அவரது மகன் ராஜ்குமார் 32, ஆகியோருக்கு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.போடி டி.சிந்தலைச்சேரி கிழக்குத்தெரு அந்தோணிராஜா 55. இவரது மனைவி லிமிரோஸ் பல ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அந்தோணிராஜா அப்பகுதியை சேர்ந்த செலின்மேரியை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகள் விக்டோரியா, மகன் ராஜ்குமார் உள்ளனர்.2019 ஜூன் 8 மாலை 4:00 மணியளவில் அந்தோணி ராஜா, மது அருந்தி விட்டு மனைவியை தாக்கினார். செலின்மேரி, மகன் ராஜ்குமாரிடம் தெரிவித்தார். இதனால் அவர் தந்தையை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த தந்தை மகனை திட்டினார். இதனால் செலின்மேரி, ராஜ்குமார் இணைந்து அந்தோணி ராஜாவை கொல்ல திட்டமிட்டனர்.ராஜ்குமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் அந்தோணி ராஜா விழுந்தார். அங்கு கிடந்த கல்லால் கணவர் மார்பில் செலின்மேரி குத்தினார். பலத்த காயமுற்று அவர் இறந்தார். வி.ஏ.ஓ., சதீஷ்குமார் புகாரில் போலீசார், தாய், மகனை கைது செய்தனர்.தேனி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசு தரப்பில் சுகுமாறன் ஆஜரானார். செலின்மேரி, ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ. ஆயிரம் அபராதம்விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார்.