துாத்துக்குடி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள், கடலில் நேற்று புனித நீராடினர். அப்போது, சேலத்தை சேர்ந்த சந்திரன், 55, திடீரென கடலில் மூழ்கினார். அவரது உறவினர்கள், சக பக்தர்கள் கூச்சலிட்டனர்.அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரை கடலில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், சிப்பி சேகரிக்கும் தொழிலாளர்கள் கடலுக்குள் இறங்கி தேடினர்.அதிகமாக தண்ணீர் குடித்த நிலையில், சந்திரன் பேச்சு, மூச்சின்றி மீட்கப்பட்டார். அவரை மீட்டு வெளியே கொண்டு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். நீண்ட நேரமாகியும் கண் விழிக்காததால், அவர் இறந்து விட்டதாக நினைத்தனர்.அவரை, ஸ்டிரெச்சரில் வைத்து கோவில் முன் துாக்கி சென்றபோது, திடீரென கண் விழித்தார். இதை பார்த்த அங்கிருந்த பக்தர்கள், பக்தி பெருக்கால், 'முருகா... முருகா' என, கோஷமிட்டனர்.கோவில் ஆம்புலன்சில், திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். கடல் நீரை அதிகளவு குடித்ததால் சந்திரன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். தற்போது சகஜ நிலைக்கு அவர் திரும்பியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அவரை, தக்க சமயத்தில் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். கடலில் மூழ்கிய சந்திரன் இறந்துவிட்டதாக கருதிய நிலையில், முருகனின் அருளால் அவர் பிழைத்ததாக, உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.