உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்; அரசு மறுப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்; அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வீரவநல்லுார், கல்லிடைக்குறிச்சி, சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டிய கிராமங்களிலும், தென்காசி மாவட்டம், கடையம், ஆழ்வார்குறிச்சி, முதலியார் பட்டி பொட்டல்புதுார், ரவண சமுத்திரம், சிவசைலம், ஆம்பூர் வாகைகுளம், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலை 11:55 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. வீடுகள் லேசாக அதிர்ந்தன. வீட்டில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளன. விக்கிரமசிங்கபுரத்தில் சில வீடுகளில் விரிசல்கள் விழுந்தன. பொதுமக்கள் அலறியடித்தபடி வீடுகளிலிருந்து வெளியேறினர். தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மலையடிவார கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.திருநெல்வேலி மாவட்டத்தில் நில அதிர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'நிலநடுக்கம் குறித்து சிஸ்மோ கிராபியில் ரிக்டர் அளவில் எந்த பதிவும் இல்லை. 'நில அதிர்வால் பெரிய சேதங்களோ, யாருக்கும் காயங்களோ இல்லை. இது குறித்து கள அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. மிக லேசான நில அதிர்வு, சிஸ்மோ பதிவில் பதிவாகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கூனிப்பட்டி வனப்பகுதியில் நேற்று முன்தினம், 300 அடி நீளத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நில அதிர்வு, 1990களில் இருந்தே ஏற்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை அமைந்துள்ள அபிஷேகப்பட்டி வழியே பூமிக்கு அடியில் நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2001 நவ., 24ல், சுரண்டை அருகே ஆனைகுளத்தில் உருகிய பாறை குழம்புகள் வெடித்து சிதறி வெளியேறின. 1998ல் அபிஷேகப்பட்டியில் பாறை குழம்புகள் உருகி வெளியேறின. இதில், மின் கம்பங்கள் உருகிப் போயின. 1999ல் திருப்பணிகரிசல்குளம், 2000 பிப்., 26ல் களக்காடு --- ஏர்வாடி அருகேயும், 2001ல் மருதகுளத்திலும் இத்தகைய பூமியிலிருந்து பாறை குழம்புகள் உருகி வெளியேறுவதும், சில இடங்களில் நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளன என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

kumaresan
செப் 23, 2024 12:02

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கூனிப்பட்டி வனப்பகுதியில் நேற்று முன்தினம், 300 அடி நீளத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நில அதிர்வு, 1990களில் இருந்தே ஏற்பட்டு வருகிறது. வய நாடு மாதிரி கொடைக்கானல் மலைகளிலும் நிலைச்சரிவு பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன . இதை புவிசார் விஞானிகளும் கணித்துள்ளனர். கொடைக்கானல் மலையில் பெரிய பெரிய கான்க்ரீட் கட்டிடங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன . கொடைக்கானலில் வாகன போக்குவரத்தும் அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு வந்துவிட்டது . இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்புக்குளாகி இருக்கிறது . முக்கியமாக கழிவு நீர் நிலத்திலேயே விடப்படுகிறது . சீக்கிரமே இயற்கையின் சீற்றத்தை எதிர்பார்க்கலாம்.


Mani . V
செப் 23, 2024 06:04

கனிமவளக் கொள்ளையர் வெடி வைத்து மலையை தகர்த்திருக்க வாய்ப்புண்டு.


Kasimani Baskaran
செப் 23, 2024 05:32

நீண்ட கால அடிப்படையில் இமயமலை தட்டு மேலெழும்பி தென் தமிழக தட்டு கீழிறங்கி தென் தமிழகத்தில் ஒரு பகுதி கடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. நீண்டகாலம் என்பது ஓராயிரம் ஆண்டுகள் அல்லது ஈராயிரம் ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.


புதிய வீடியோ