தி.மு.க.,வில் மா.செ.,க்கள் மாற்றம் கலக்கத்தில் முக்கிய அமைச்சர்கள்
தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் பதவி பறிப்பு நடவடிக்கை தொடர்வதால், சென்னை, காஞ்சிபுரம், விருதுநகர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.வரும் 2026 சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை முன்வைத்து, கட்சி மாவட்டங்களை பிரித்து, புதிய நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் நியமித்து வருகிறார். சமீபத்தில், 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்; 4 மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டனர்.'இது களையெடுப்பு அல்ல; கட்டுமானச் சீரமைப்பு. கட்சியின் உறுதிமிக்க கட்டுமானம் மேலும் வலிவுடனும், பொலிவுடனும் திகழ்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கை தொடரும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அதன் அடிப்படையில், மூத்த மாவட்டச் செயலர்கள் வசம் உள்ள சட்டசபை தொகுதிகளும் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கட்சியின் நலன் கருதி மாற்றங்கள் முடிவுகள் தொடரும் என, முதல்வர் கூறியிருப்பதால், சில அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களும் பிரிக்கப்டலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளன. அதனால், அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.குறிப்பாக, சென்னை மாவட்டங்களில், 16 தொகுதிகளுக்குமாக 6 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் உள்ள சட்டசபை தொகுதிகளை பிரித்து, கூடுதலாக 2 பேருக்கு மாவட்டச் செயலர் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுந்தர் எம்.எல்.ஏ., என, 2 மாவட்டச் செயலர்கள் உள்ளனர். இருவரிடமுள்ள தொகுதிகள் பிரிக்கப்பட்டு, கூடுதலாக 2 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளும், அமைச்சர் காந்தியிடம் உள்ளன. எனவே, இந்த மாவட்டத்திற்கு, மேலும் ஒரு மாவட்டச் செயலர் நியமிக்கப்பட உள்ளார்.கடலுார் மாவட்டத்தில், 9 தொகுதிகள் உள்ளன. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செ்ல்வம், கணேசன் மாவட்டச் செயலர்களாக உள்ளனர். இங்கும் இரு மாவட்டச் செயலர்கள் கூடுதலாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.சேலத்தில், 11 சட்டசபைகள் உள்ளன. தற்போது செல்வகணபதி எம்.பி., அமைச்சர் ராஜேந்திரன், சிவலிங்கம் மாவட்டச் செயலர்களாக உள்ளனர். புதியதாக, 2 மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது, ராஜேஷ்குமார் எம்.பி., மதுரா செந்தில் ஆகியோர் மாவட்டச் செயலர்களாக உள்ளனர். கூடுதலாக, ஒரு மாவட்டச் செயலர் நியமிக்கப்பட உள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில், 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மாவட்டச் செயலர்களாக உள்ளனர். கூடுதலாக ஒரு மாவட்டச் செயலர் இடம்பெறவுள்ளார். அதேபோல் கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில், தலா ஒரு மாவட்டச் செயலரும், கோவை மாவட்டத்தில் இரண்டு மாவட்டச் செயலரும் கூடுதலாக நியமிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -