திங்கள் கிழமை மின் தடை வேண்டாம் வியாபாரிகள் வலியுறுத்தல்
சென்னை:'வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள் கிழமை, மின் தடை வேண்டாம்' என, வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக மின் வாரியம் சார்பில், துணைமின் நிலையங்கள் மற்றும் மின் சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. ஞாயிறு விடுமுறைக்கு பின், திங்கள் கிழமை அன்று காலை கடைகளை திறந்ததும், மின் தடையால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இது, மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, திங்கள் கிழமை பராமரிப்பு பணிக்கு தடை விதிக்க வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது: பெரும்பாலான கடைகள், தொழில் நிறுவனங்கள், ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதில்லை. அப்படியே திறந்தாலும் மதியம் மூடப்படுகின்றன. வாரத்தின் முதல் நாளான திங்களன்று காலை கடைகளை திறந்ததும், மின்சாரம் இல்லை என்றால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், அறிவித்தபடி மதியம், 2:00 மணிக்கு மின்சாரம் தராமல் இரவு வரை தாமதமாகிறது. ஜெனரேட்டரை இயக்கினால் செலவு அதிகரிக்கிறது. திங்கள் கிழமை மின் தடையால், ஞாயிறு, திங்கள் என, இரு நாட்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, திங்கள் பராமரிப்பு பணி எனக்கூறி, மின் தடை ஏற்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.