காக்கா ஆழியை அழிப்பதில் மெத்தனம் அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் எச்சரிக்கை
சென்னை:'காக்கா ஆழியை அழிப்பதில், மெத்தனப்போக்கு தொடர்ந்தால், நீர்வளத்துறை மற்றும் சதுப்புநில ஆணைய அதிகாரிகள், நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும்' என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.'தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், காக்கா ஆழி வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால், இறால், மீன் உள்ளிட்ட கடல் உயிரிகள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. உத்தரவு'இதனால், பழவேற்காடு ஏரி போன்ற உப்பங்கழிகளை நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்' என, குமரேசன் சூளுரன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கடந்த டிசம்பர் 20ல், தமிழக சதுப்புநில ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை. கடந்த, 18ம் தேதி வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், காக்கா ஆழியை அழிப்பதற்கான தீர்வுகள் இல்லை. எண்ணுார் சிற்றோடை, அத்திப்பட்டு கிராமம், வடசென்னை அனல் மின் நிலைய பகுதிகளில், ௭ கி.மீ., துாரத்திற்கு, காக்கா ஆழியை அகற்றும் பணிகள் நடந்ததாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. எண்ணுார் சிற்றோடையில், எந்த வழிமுறையை பின்பற்றி, எவ்வளவு காக்கா ஆழி அகற்றப்பட்டது? காக்கா ஆழியை முழுமையாக அகற்ற எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதையே, நீர்வளத்துறையிடம் தீர்ப்பாயம் எதிர்பார்க்கிறது. ஆனால், அதுபற்றி அறிக்கையில் இல்லை.காக்கா ஆழியை உண்ணக்கூடிய வேறொரு உயிரினத்தை வைத்து, காக்கா ஆழியை அழிப்பது சாத்தியமற்றது என்று கூறப்படுவதால், மாற்று வழியை கண்டறிய வேண்டும். அகற்றப்பட்ட காக்கா ஆழியை, வேறு விதங்களில் பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வு குறித்தும் தகவல் இல்லை. அவகாசம்
இரண்டு ஆண்டுகள் கடந்தும், காக்கா ஆழியை அழிப்பதில், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் மெத்தனமாக உள்ளன. காக்கா ஆழியை அழிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள், பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த மெத்தனப்போக்கு தொடர்ந்தால், தமிழக நீர்வளத்துறை, சதுப்புநில ஆணைய அதிகாரிகள், நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டியிருக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.காக்கா ஆழி அழிப்பு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரியதை தொடர்ந்து, வழக்கை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.