திரிணமுல் காங்., கூட்டத்தில் பங்கேற்க சீமானுக்கு அழைப்பு
கோவை: நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழின பேரெழுச்சி பொதுக்கூட்டம், கோவை 'கொடிசியா' மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., மனோரஞ்சன் பியாபாரிக்கு, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நினைவு பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கினார்.பொதுக்கூட்டத்தில் மனோரஞ்சன் பியாபாரி பேசுகையில், ''நாம் தமிழர் கட்சித் தொண்டர்களான உங்கள் அனைவரிடமும் நெருப்பு கதிர் இருக்கிறது; அதை சீமான் அணைய விட மாட்டார். ''கொல்கட்டா சட்டசபையில், பெங்காலிக்கு தனிக்கொடி உருவாக்க கோரியுள்ளேன். அதேபோல், தமிழகத்துக்கும் ஒரு கொடி உருவாக்கப்பட வேண்டும். ''இங்கு நடப்பது போல், எழுச்சியான கூட்டத்தை கொல்கட்டாவில் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் நடத்த உள்ளோம். அதில், சீமான் பங்கேற்க வேண்டும். நம் மொழியை நாம் தான் பாதுகாக்க வேண்டும். மொழி திணிப்பை ஒரு நாளும் ஏற்கக்கூடாது. ஒரே நாடு; ஒரே மொழி என்பதை திணிக்க முயல்கின்றனர். அதை ஏற்க முடியாது. தமிழகத்தில் தனித்து தான் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்ற சீமானின் எண்ணத்தை வரவேற்கிறோம்,'' என்றார்.